பக்கம்:நிழல் முகங்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 - சு. சமுத்திரம்

இருவரும் எஸ்-11க்குள் வந்தார்கள். நவாப்ஜானும் பலராமனும் ஒருவர் தோளில் இன்னொருவர் தோள் போட்டுத் துரங்கிக் கொண்டிருந்தார்கள், பயல், பலராமனின் தலையைத் துக்கினான். கண்கள் விழிப்பதற்குப் பதில் வாய்தான் குறட்டை போட்டது. நவாப்ஜானின் தோளைக் கிள்ளினான். பலனில்லை. எல்லோருமே தூங்கிக் கொண்டிருந்ததால் யாரிடம் முறையிடலாம் என்பதுபோல் சுற்றும் முற்றும் பார்த்தான் பிறகு, "அப் அப் என்று கத்தினான். அந்தோணியிடம் இடம் பிடிபடாமல் இருக்க அப்போது எப்படி நரிபோல் ஊளையிட்டானோ அதேபோல் இப்போதும் ஊளை யிட்டான். இந்த சமயத்தில் எங்கேயோ வெளியே போயிருந்த ரயில்வே தொழிலாளர்கள் நாராயணனும், கோவிந்தனும் உள்ளே வந்தார்கள். அந்தப் பெண்ணையும் பயலையும் பார்த்தபடியே நின்றார்கள். உடனே, பயல் அந்தப் பெண்ணின் கையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அவர்களிடம் 'சொல்லு' என்று சமிக்ஞை செய்தான். எத்தனையோ சத்தங்களுக்கும் துரங்கிப்போகும் நவாப்ஜானும், பலராமனும் அந்தப் பயல் இன்னொரு தடவை போட்ட ஊளைச் சத்தத்தில், அந்த அபயக் குரலை அடையாளம் கண்டவர்கள்போல் எழுந்து விட்டார்கள். இளம் பெண்களும் தெலுங்கம்மாவும் மற்றும் பலரும் துக்கம் கலைந்தார்கள்.

எல்லோரும் அந்தப் பெண்ணை அர்த்தத்தோடு பார்த்தபோது அவள் அழப்போனாள். பிறகு, அதைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். தட்டுத் தடுமாறி சொல்லலாமா. வேண்டாமா. என்பது போல் யோசித்து, யோசித்துப் பேசினாள்.

"ஐந்தாறு பேர் என்னைக் கொலை செய்ய்றதுக்காக இந்த ரயிலுல வந்திருக்காங்க. நீங்க எனக்கு அடைக்கலம் கொடுக்கணும். முடியுமுன்னா செய்யுங்க. ஒருவேளை மற்ற பெட்டிகளில் இருந்தவங்க நினைக்கிற மாதிரி அவங்க இங்கே வந்து என்னைக் கொலை செய்யற முயற்சியில் உங்களையும் ஏதாவது செய்திடு வாங்கன்னு பயப்பட்டால், இப்பவே சொல்லிடுங்க. எனக்குன்னு ஒரு வழி இருக்கு அதுல இறங்கிக்குவேன்."

நவாப்ஜானுக்கு ரோஷம் ஏறியது. எல்லோருமே உயிருக்கு ஆபத்தான அந்த வேளையிலும் கம்பீரம் கலையாமல் பேசிய அந்தப் பெண்ணை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அங்கே ஒரு கொலையே நடக்கலாம் என்பதை அனுமானித்து தாங்களே கொலை செய்யப்பட்டு விடுவோமோ என்பதுபோல் மிரள மிரளப் பார்த்த அந்த இரண்டு இளம் பெண்களும் ஒருவரை ஒருவர் கண்களால் உஷார் படுத்திக் கொண்டார்கள் நவாப்ஜான் எழுந்து நின்றே பேசினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/41&oldid=588249" இலிருந்து மீள்விக்கப்பட்டது