பக்கம்:நிழல் முகங்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சு. சமுத்திரம்

அவள் பேசுவதற்கு ஆயத்தமாக உதட்டோர முனைகளைத் துடைத்துக் கொண்டாள். கண்ணில் தேங்கிய நீராலேயே முகத்தைக் கழுவிக் கொண்டாள். பிறகு, நிதானமாகப் பேசினாள். அவள் பேசப் பேச, தமிழே அவள் வடிவில் பெண்ணாகிப் பேசுவது போலத் தோன்றியது. பழைய பாட்டியாகவும், புதிய பேத்தியாகவும் பேசினாள்.

"பழைய காலத்துல தமிழ்க் குலம் பல நாடுகளுக்குப் போய் அந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அடித்தளம் போட்டது. இதை நான் ஆணவமாய் சொல்லல. பாரதியார் பாடல்களில் வெளி நாட்டுக்குப் போன நம்முடைய இனம் பட்டபாடும் பெற்ற நோய்களும் சோகத்தோடு ஒலிக்குது. தமிழினம் உழைத்தது. மாதிரி - அந்த உழைப்புக்காக அவர்கள் கொடுத்த விலை மாதிரி வேறு எந்த இனமும் கொடுத்திருக்குமோ என்கிறது சந்தேகம். காசுக்கு விலையாகிப்போன தமிழினம் எத்தனையோ விலைகளைத் திருப்பிக் கொடுத்திருக்கு பாரதியார் வெளிநாட்டுக்குப் போன தமிழர்களைப் பற்றிய பாடல்களை தாம் கண்ட அனுபவத்தின் மூலம் பாடியதாய் இலங்கை தமிழறிஞர் சிவதம்பி சொல்லக் கேட்டிருக்கேன்.”

"உதாரணமாய் முன்னாலே ஒரு சமயம், திருநெல்வேலியில் ஒரு இளம் விதவைப்பெண் தன் மகளுடைய நல்வாழ்வுக்காக பிஜித்தீவுக்குக் கப்பல் ஏறிக் கரும்புத் தோட்டத்துல வேலைக்குப் போயிருக்காள். அருமை மகளுக்கு அங்கிருந்தபடியே பணம் அனுப்பியிருக்கிறாள். இந்த உழைப்பில அவளுக்குக் குஷ்டரோகம் வந்துட்டு. கடைசிக் காலத்துல கண்ணுக்குள் நின்ன மகளைப் பார்ப்பதற்கு திருநெல்வேலிக்குத் திரும்பி வந்திருக்கிறாள். ஆனால், மகளிடம் ஒரு குஷ்டரோகத் தாயாகப்போக அவள் விரும்பவில்லை. நெல்லைக்கு வந்ததும் உறவினர் ஒருவர் மூலம் பெற்ற மகளைத் தாம்பரபரணி நதிக்கரைக்கு வரவழைத்து அவளைக் கண்கொண்ட மட்டும் பார்த்தாளாம். மகளுக்கு அவள்தான் தாய் என்று தெரியாது. கடைசியில், மகள் போனதும் அந்த ஆற்றங்கரையில் ஒரு புளியமரத்தில் தூக்குப் போட்டுச் செத்தாளாம். இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட பாரதியார் "கரும்புத் தோட்டத்திலே கால்களும் கைகளும் சோர்ந்து வருந்துகின்றனரே என்று பாடினாராம்; பாடிவிட்டு, பிறகு மயங்கி விட்டாராம்.

"இதேப்ோல் அந்தக் காலத்தில் தூத்துக்குடியிலும் ஒரு சம்பவம் மலேசியாவில் தோட்டத்துல வேலை பார்க்கிறதுக்காக் கங்காணிக் கூலித் தொழிலாளர்களைக் கொண்டு சேர்க்கிறதுக்குக் காசு வாங்கிட்டான். கப்பல்ல ஆட்கள் ஏறிற்று. ஆனால், தொழிலாளர் எண்ணிக்கையில் ஒன்று குறைந்ததாம். இதனால் கங்காணி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/45&oldid=588260" இலிருந்து மீள்விக்கப்பட்டது