பக்கம்:நிழல் முகங்கள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 39

உடைக்காளேன்னு யோசிக்கீங்களா? அல்லது இந்தக் காலத்து மலிவு எழுத்தாளர்கள் மாதிரி முக்கோணக் காதலான்னு. நினைக்கீங்களா. ஆசைக்கு எப்படி வெட்கமில்லையோ. அப்படித் துக்கத்துக்கும் வெட்கமில்ல."

அவள் மீண்டும் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு, அவர்களைப் பார்த்தாள். பலராமன் உணர்ச்சிப் பிழம்பானான்.

"நீ நினைக்கிறது மாதிரி அநியாயமாய் சந்தேகப்படுறது மாதிரியான ஆளுங்க இல்லம்மா நாங்க. நட்பையே உறவாய் நினைக்கிற தமிழர்கள். பேசும்மா. ஒன் பிரச்சினைக்கும் வழி பிறக்கும் என்கிற நம்பிக்கையோட பேசும்மா"

இதற்குள், அந்த ரயில் பயல், அவள் உள்ளங்கையைப் பிடித்து அழுத்தியபடியே "உம். உம்." என்றான். அவளும் தொடர்ந்தாள்.

"எனக்கும் ஒங்ககிட்டே பேசுறதுல சுமை குறைஞ்சது மாதிரி இருக்குது. ஊர்ல இந்த மாதிரி யாருமே காது கொடுத்தது இல்ல."

"ஊர்ப்பயலுக கிடக்கான்க. சொல்லும்மா."

"சொல்றேன். எப்படியோ தாமரைப்பாண்டியனுக்கும் எனக்கும் பிடிப்பு ஏற்பட்டது. ஒரு தடவை அவன் தங்கை "ஏண்ணி! ஒங்க கழுத்துல செயினை எங்கண்ணா கழுத்துலதான் போடேன். ஓங்க ஞாபகத்தோடு இருப்பான்” என்றாள். உடனே நான் அம்மாவிடம் கூடக் கேளாமல், அதைக் கழட்டி அவனிடம் நீட்டினேன். அவனும் மாட்டிக் கொண்டான். இதேபோல் எனக்குப் பிடித்தமான ஒரு சீனப்புடவையை வைத்திருந்தேன். தொட்டாலே பூவைத் தொடுவது மாதிரியான சுகம் கொடுக்கும் புடவை. அதையும் தாமரைப் பாண்டியின் தங்கை தமயந்தி பார்த்த பார்வையிலே புரிந்து கொண்டு கொடுத்துவிட்டேன்."

“மன்னிக்கவும். இப்படி செய்த உதவியைச் சொல்லிக் காட்டுவது தப்புத்தான். ஆனால் அவற்றை உதவிப் பொருட்களாய் கொடுக்காமல். பந்த பாசத்தோட உருவகமாய் கொடுத்ததால்தான் இதைச் சொல்லவந்தேன். எப்படியோ.. ஊர்ல ஆனந்தமாய் விடுமுறையைக் கழித்துவிட்டு. கோலாலும்பூருக்குத் திரும்பி வந்தோம். அங்கே சிறிது காலத்திற்குள் ஒரு பயங்கரம் எங்களுக்காகவே காத்திருந்தது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/52&oldid=588278" இலிருந்து மீள்விக்கப்பட்டது