பக்கம்:நிழல் முகங்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 45

பழையபடியும் மலேசியாவுக்கு வரமுடியாதுன்னு பயமுறுத்திக் கூடப் பார்த்தாங்க. அவங்களை எப்படியோ சமாளிச்சு பிளேன்ல வந்தோம். சென்னையில் இருந்து தென்காசிக்குப் போனோம். நாங்க வருவதை முன்கூட்டியே தெரிவித்திருந்ததனால் ரயில் நிலையத்தில் என்னோட தாய்மாமா. அதுதான் தாமரைப்பாண்டியின் அப்பா வந்திருந்தார். முன்பெல்லாம் ரயில் நிலையத்துக்கு ஒரு பட்டாளமே வரும். அப்போ தாமரைப்பாண்டியனும், ரத்னவேலும் போட்டி போட்டுக்கொண்டு முன்னால நிப்பாங்க. ஆனால் அப்போ மாமா மட்டும்தான் வந்திருந்தார். அம்மா அண்ணனைக் கட்டிப் பிடித்து அழப்போனாள். நான் அண்ணனையும், தங்கையையும் பார்த்து ஆறுதல் சொல்லுனுமுன்னு நினைத்தேன். அம்மாதான் அவர் தோளில் சாய்ந்து அழுதாள். மாமாவும் லேசாய்க் கண்ணிர் விட்டதாய் ஞாபகம். ஆனாலும் அது பெரும் அளவுக்கு இல்லை."

"மூணு பேரும் ஒரு காரில் ஏறினோம். மாமா. அப்பா செத்ததை ஏதோ பரீட்சைக் கேள்வி மாதிரி கேட்டார். அம்மா பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு கேள்வி கேட்டார். "ஆமாம்மா. நொடித்து வந்திருக்கியே. கப்புலுல வந்திருக்கலாமே. எதுக்காகப் பணத்தைக் கொட்டி பிளேன்ல வரணும். அப்புறம் கஷ்டப் படப்போறது நீதானே.” என்றார்.

"அம்மா ஆடிப்போய் விட்டாள். சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்ட திருப்தியில் மாமா, விரல்களுக்குச் சொடக்குப் போட்டார். பிறகு, ஒனக்கு இந்த மாதிரி நிலமை ஏற்பட்டதை நினைக்கும்போது மனசு என்னவோ செய்யுது என்றார் மாமா. உடனே அம்மாவுக்குப் போன உயிர் திரும்பியது. அண்ணனின் தோளில் சாய்ந்தபடியே இனிமேல் நீதான் எல்லாமே என்று அழுதுத் தீர்த்தாள்."

"கிராமத்திற்குப் போகிற வழியில் கார், கோணச் சத்திரத்தில் நாங்கள் வாங்கிப்போட்ட வீட்டின் முன்னால் வந்து நின்றது. அந்த வீட்டைப் பார்த்ததும் அம்மாவும் நானும் அதிர்ச்சி அடைந்தோம். நான் மாமாவை நேருக்கு நேராய்ப் பார்த்து, கோபத்துடன் கேட்கப் போனேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/58&oldid=588295" இலிருந்து மீள்விக்கப்பட்டது