பக்கம்:நிழல் முகங்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 49

பொறுக்க முடியாவிட்டாலும், உனக்காகவாவது பொறுத்துக்கடி" என்று சூசகமாகச் சொன்னாள். ஆனால், அந்தப் பேச்சை என்னால் சுவைக்க முடியவில்லை."

'காரணம், தாமரைப்பாண்டியன் என்னிடம் ஏனோ தானோவென்று நடந்தான். ஒரு தடவை, நான் கல்லூரியில் படிக்கப் போவதாய் சொன்னபோது அவன், "கல்யாண வயசில் காலேஜ் எதுக்கு" என்று கண்சிமிட்டிச் சொன்னான். உடனே, அவன், எனக்குத் தாலி கட்டப்போவதை சுட்டிக் காட்டுவதாக நினைத்து, நானும் கல்லூரிப் பேச்சை எடுக்கவே இல்லை. ஆனால், அவனோ பட்டும் படாமலும் நடந்தான். ஒருவேளை கிணற்றுத் தண்ணிரை வெள்ளம் கொண்டு போகாது என்று அனுமானத்தில் நடந்து கொள்கிறான் என்று ஆறுதல் வேண்டுமென்றே எனக்கு நானே சொல்லிக்கொண்ட ஆறுதல்."

"ஆனால், அந்த எண்ணத்திற்கும் மண் விழுந்தது. ஒருநாள் வழக்கம் போல அம்மா, பெரிய மாமா வீட்டுத் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தாள். துணிகள் கிடந்த துணிக் கல்லில் அவள் கைபட்டு ஒரே ரத்தம். என்னால் தாள முடியவில்லை. அம்மாவைப் பலவந்தமாக அப்பு படுத்தி விட்டு, நானே அந்தத் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தேன். அப்போது வெளியூர்க் காரர் ஒருவரும், பெரிய மாமாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். தாமரைப்பாண்டியனுக்குப் பக்கத்து ஊரில் பெண் பார்க்கிறார் களாம். பெண் பிடித்ததோ இல்லையோ, மாமா, ஐம்பது பவுன் நகையும் ஐம்பதாயிரமும் கேட்டாராம். முதலில் தயங்கிய பெண் வீட்டார், இப்போது அதுக்குச் சம்மதித்து விட்டார்களாம். மாமா, அந்த வெளியூர் ஆசாமியிடம் சந்தோஷமாகத் தலையாட்டிப் பேசினார். இந்த ஆடி மாதம் போனதும் ஆவணியில் கல்யாணத்தை முடித்துவிடலாம் என்று மாமி குறுக்கே வந்து சொன்னாள். இந்த லட்சணத்தில் என்னைப் பார்த்து "துணியை இப்பவே துவைக்காதே. கொஞ்சம் ஊற வை” என்றாள்."

"எனக்குப் பற்றி எரிந்தது. ஒவ்வொரு துணியும் ஒரு டன் எடையாகத் தோன்றியது. அந்த வேலையை நான் மரும்கள் மாதிரி செய்தபோது, அத்தை, அவள் வீட்டில் நான் வேலைக்காரியாய். உண்ணும் உணவுக்குக் கூலியாய் செய்வதுபோல் நினைப்பது தெரிந்தது. தெரியத் தெரிய. எனக்கு அவமானமாக இருந்தது. என்னுடைய சுயநலத்திற்காக தாமரைப்பாண்டித் தடியனை மணக்க வேண்டும் என்பதற்காக, என் அம்மா, நாத்தம் பிடித்த துணிகளை துவைப்பதைக்கூட அனுமதித்திருக்கிறேன். என் சுயநலம் எனக்கு நன்றாய் வெளிப்பட்டது. கூனிக் குறுகிப் போனேன். இறுதியாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/62&oldid=588307" இலிருந்து மீள்விக்கப்பட்டது