பக்கம்:நிழல் முகங்கள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபவப் பகிர்வு

-சு. சமுத்திரம்

இந்த நாவல், சுமார் பத்து ஆண்டுக்குப் பிறகு புதுப்பிக்கப்படுகிறது. அதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தடவை டெல்லி - சென்னை ரயில் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை வைத்து, இதனைப் படைத்தேன். முதலில் எழுதும்போதே அத்தனை முகங்களும் நிழலாகத்தான் தோன்றின. அதனால்தான், இதற்கு "நிழல் முகங்கள்" என்று பெயரிட்டேன். ஆனால், இவற்றில் முக்கால்வாசிப்போர் நிச முகங்கள். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அந்தப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, இந்த நிழல்கள் நிச முகங்களாக தோன்றுகின்றன.

இந்த நாவலில் வரும் பலராமன், நவாப் ஜான் , அந்தோணி, அண்ணாமலை, நாராயணன், டில்லிப் பெண்கள் - எல்லாவற்றிற்கும் மேலாக அந்த ரயில் பயல், நிசமான பாத்திரங்கள். அந்த மூன்றுநாள் பயணத்தில், அண்ணன்-தம்பிகளாக, சோதர-சோதரிகளாக பழகினோம். ஆனால், இதுவும் ரயில் நட்பாகவே மாறிப்போய்விட்டது.

பிரபல மலேசியப் பத்திரிகை "தமிழ்நேசன்" என்னிடம் ஒரு தொடர்கதை கேட்டபோது, இந்த அனுபவங்களையே மையமாக வைத்து எழுதுவது என்று தீர்மானித்தேன். ஆனால், "தமிழ்நேசன்" என்னிடம் எதிர்பார்த்ததோ வேறு பாணிக்கதை. அநேகமாக, நான் இங்கே எழுதிய கதைகளை, அவர்கள் அதிகமாக படித்திருக்க மாட்டார்கள் என்பதாலேயே, எனக்குத் தொடர்கதை எழுதும் அழைப்பை விடுத்தார்கள் என்று நினைக்கிறேன். நானும், "பேகம் உறவுகள்" என்ற தலைப்பில், முப்பதுக்கும் மேலான அத்தியாயங்களை எழுதினேன். அந்தப் பத்திரிகையால் மெல்லவும் முடியவில்லை; விழுங்கவும் முடியவில்லை. ஒரு ரயில் பயலை - அதுவும் அழகற்ற, வாய்பேச முடியாத ஒரு சிறுவனை மையமாக வைத்து, கதையாக இழுத்துக்கொண்டு போவது அந்தப் பத்திரிகைக்கு பிடிக்காமல் போனதில் தவறில்லை.

"தமிழ்நேசன்" பத்திரிகைப் பிரதிகளும், எனக்கு ஒழுங்காக வந்த பாடில்லை. ஒருதடவை, அதன் ஆசிரியர் திரு. விவேகானந்தன் அவர்களுக்கு, காரசாரமாக கடிதம் எழுதினேன். அவரும் திருப்பி மிளகாய் நெடியில் ஒரு கடிதம் எழுதினார். அதில், என்மீது அவருக்குத் தனிப்பட்ட கோபமில்லை என்பதும், இப்படிப்பட்ட கதையை அவர் எதிர்பாராத அதிர்ச்சியே இந்த மிளகாய் வாசனை என்றும் புரிந்துகொண்டேன். இந்தத் தொடர்கதை முற்றுப் பெற்ற பிறகு, சென்னைக்கு வந்திருந்த மலேசியா எழுத்தாளர்கள் கூட்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/7&oldid=588140" இலிருந்து மீள்விக்கப்பட்டது