பக்கம்:நிழல் முகங்கள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 71

"நான், மீண்டும், சின்னமாமாவின் வீட்டுக்குள்ளேயே முடங்கினேன். வக்கீலும் போய்விட்டார். வைத்தியலிங்கம் கேட்டதற்கு, "கோர்ட்டில் போனால் ஜெயிக்காதாம்” என்று சொல்லிவிட்டேன். ஆனால், எப்படியோ சின்ன மாமாவுக்கு, விஷயம் தெரிந்துவிட்டது. வக்கீல் என்னிடம் பேசிய விஷயத்தை, எப்படியோ யாரோ சொல்லி விட்டார்கள். அசல் அப்பாவிபோல் தோன்றும் மாமா, நான் போகாமல் இருப்பதற்கான காரணத்தையும் கண்டுபிடித்து விட்டார். ஒருநாள் சின்ன அத்தையும் மாமாவும் என்னிடம் வந்தார்கள். அத்தையின் கையில் கிடந்த தங்க வளையல் மாமாவின் விரல்களில் ஆடியது. அதை மாமா நீட்டியபோது நான் விழித்தேன். உடனே அத்தை, "மெட்ராஸ் போய் வழக்குப் போடும்மா. இவங்களை விடப்படாது. வாங்கிக்கோம்மா. இது ஒன் அம்மா போட்ட வளையல்தான்" என்றாள். நான் விம்மி விம்மி அழுது, மாமியின் மார்பிலே சாய்ந்தேன். அவள், என் முதுகைத் தட்டிக் கொடுத்தாள். அத்தையின் இரண்டு பவுன் வளையலை கோணச்சத்திரத்து மார்வாடியிடம் இரண்டாயிரம் ரூபாய்க்கு அடகு வைத்தேன். மாமா வீட்டில், ஆயிரம் ரூபாயை நீட்டினேன். அவர்கள் ஐநூறு ரூபாயை மட்டும் வாங்கிக் கொண்டார்கள்."

"நான் புறப்பட்டேன். கண்ணகி கால் சிலம்போடு பாண்டிய மன்னனிடம் நீதிகேட்கப் போனதுபோல், நான் அடகு வைத்த வளையல் பணத்தோடு, நீதிமன்றத்தில் அது இல்லாததைத் கேட்கப் புறப்பட்டேன். தொழுவில் பசுமாடுகளை அவிழ்த்துக் கொண்டு இருந்த அம்மாவிடம் என் திட்டத்தைச் சொன்னேன். அம்மா என்னை ஏறிட்டு மட்டுமே பார்த்தாள். அப்படியும் பேசவில்லை. இப்படியும் பேசவில்லை. திடீரென்று என்னைப் பார்த்த முகம் அந்த மாடுகளைப் பார்த்தது. பிறகு அவற்றைக் கட்டிப் போட்ட கயிறுகளை அவிழ்க்கக் குனிந்தது, நான் அம்மாவைக் கட்டிப் பிடித்தழுதேன். அம்மா. அம்மா. பேசும்மா. பேசும்மா.. என்று பேசினேன். மலேசியாவில், பள்ளிக்கூட மாணவிகளோடு நான் இரண்டே இரண்டுநாள் சுற்றுலா போகும் போதுகூட, என்னை கட்டிப் பிடித்துக் கண்ணைக் கசக்கும் அம்மா, இப்போதோ காலவரம்பற்ற என் பயணத்தைப் பற்றி, கண்டுக்கவில்லை. கண்ணிர் சிந்தவில்லை. அவள் இப்போது விருப்பு வெறுப்புக்கு அப்பாற் பட்ட பெண் திருமூலராகி விட்டாள். திருமந்திரத்தைத் தந்த திருமூலரும், மாடு மேய்த்த இடையர்தானே."

"நான், எந்த வேகத்தில், எதிர்பார்ப்புடன் சென்னை வந்தேனோ, அந்த வேகத்திலேயே ஏமாந்தேன். வழக்கறிஞர் முத்துசாமியைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/84&oldid=588364" இலிருந்து மீள்விக்கப்பட்டது