பக்கம்:நிழல் முகங்கள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சு. சமுத்திரம்

கீழே படுத்திருந்த பலராமனை, காஞ்சனாவின் திட்டுக்கள் எழுப்பிவிட்டன. அவன் கோபத்தோடு எழப் போனான். ‘என்னதான் நினைச்சுட்டாள்? ரெண்டுல ஒன்றைப் பார்த்துடலாம். திருட்டுக் கழுத. பேசுறான் பாரு. குடிச்சுட்டுப் படுக்கிறவனை திட்டுறாள் பாரு. குடிகாரன் என்கிறதைக் காட்டுறேன் பாரு.

அந்த ரயில், சந்திரபூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்று விட்டு, சக்கரங்கள் இருளின் ஒசையாக, பயணிகள், தொட்டில் குழந்தைகளாக தான் மட்டுமே தூங்காமலே ஒடியது.

அப்படி ஒடிய ரயில், ஒரு இடத்தில் நின்றபோது, தாலாட்டு சுகம் கெட்ட குழந்தைபோல் பலர் தூக்கம் கலைந்தார்கள். அந்த ரயில் நின்ற ராமகுண்டம், ஆந்திராவிற்கு உரியது. அந்த மாநிலத்திற்கே இயல்பான காரத்தை எல்லோருமே சூடாக உணர்ந்தார்கள். இந்தியாவிலேயே மிக அதிக அளவிற்கு, அதாவது 40 டிகிரி வெயிலைக் கொண்டது, இந்த ராமகுண்டம். ஆகையால் இதைச் சிலர் "அனல் குண்டம்" என்றும் கூறுவதுண்டு. பூமியே, எரிசட்டியானது போன்ற சூடு. மின்விசிறிகள், அக்கினிக் காற்றை உமிழ்ந்து கொண்டிருந்தன.

அந்தச் சூட்டைவிட, காஞ்சனாவின் சொல்சூட்டில் கிளர்ந்தெழுந்த பலராமனை, நவாப்ஜான் அமுக்கிப்பிடித்தான். ஆனால் காஞ்சனாவோ, சென்னை நகர மண்வாசனையை ஊதிக் கொண்டிருந்தாள். "புறம்போக்குப் பயல்கள். பொறுக்கிகள். கஸ்மாலங்கள். கண்றாவிகள்."

பலராமன், மீண்டும் எழப்போனான். அவன் தலையைத் தரையோடு போட்டு பிடித்தபடியே, நவாப்ஜான் தோழனின் காதில் கிசுகிசுத்தான். "பேசாமல் துரங்குடா டோய். எப்போ அவளை நாம் சிஸ்டர்னு சொன்னோமோ. அப்பவோ, நாம் அண்ணனா யிட்டோம். அவள் தங்கச்சியாகாட்டியும் பரவாயில்லை. நாம் அண்ணனாவே நடந்துக்குவோம்!" என்றான். பலராமன், அடங்கிப் படுத்தான். இப்போது கல்யாணி, திட்டத் துவங்கினாள். சென்னைத் தமிழிற்குப் பதிலாகத் தஞ்சைத் தமிழ். பண்பில்லாதவங்க. பழகத் தெரியாதவங்க. அக்காள். தங்கையோடு பிறக்காதவங்க. அடுத்துக் கெடுக்கிற துரோகிங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/99&oldid=588408" இலிருந்து மீள்விக்கப்பட்டது