பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மாறி, தானிருந்த மரத்தைவெட்டும் என்பது வனிதாமணிக்கு ஒருநாள் புரியத் தொடங்கியது. அந்தநாள் வந்தபொழுது வனிதாமணியின் நிலை எப்படி இருந்தது தெரியுமா?

நெடுஞ்சாலையில் கார் ஒய்யாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஓட்டிக் கொண்டிருக்கும் ஒய்யாரி வனிதாமணி, சொந்தக்காரில் போவது போன்ற தோரணையில் உட்கார்ந்திருக்கிறாள். கர்வத்தின் கர்ஜனை முகத்தில் பொங்கி வழிகிறது. கேட்டதும் காரைக் கொடுத்து விடுகின்ற கங்காதரனை நினைத்தால், வனிதாமணிக்குச் சிரிப்பு தாங்க முடியாமல் கொப்பளிக்கும். ஏனென்றால், வனிதாமணி என்றால், கங்காதரனுக்கு அவ்வளவு அலர்ஜி.

அவள் வதந்திக்குப் பயந்து, காரைக் காணிக்கையாக்கி விட்டு, அவன் ஒளிந்து கொள்வான், பதுங்கிக் கொள்வான். அவள் பக்கத்திலே உட்கார்ந்திருந்த பாலாம்பாளுக்கும் இந்தச் சேதி முழுவதும் தெரியும். இல்லையென்றால் வனிதாமணியின் அருகே இப்படி ஒயிலாக உட்கார்ந்திருக்க முடியுமா?

வனிதாமணியின் வலது கையே இந்தப் பாலாம்பாள்தான். தனக்குப் பிடிக்காதவர்களைப் பற்றி முக்கியமானவர்களிடம் வதந்தியைப் பரப்புவதில் வனிதாமணி கெட்டிக்காரி என்றால், மொட்டைக் கடுதாசி எழுதுவதில் பாலாம்பாள் படு கைகாரி. இப்படியாக அவர்கள் வாழ்வு குறுக்கு வழியில் உல்லாசமாகப் போய்க் கொண்டிருந்தது.