பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

வளைந்த தடியின் நிழல் வளைந்துதான் தெரியும். எந்தக் காலத்திலும் அது நிமிர்ந்து நேராக இருக்கவே இருக்காது.

நலிந்த உடலில் தோன்றும் எல்லாமே நலிந்துதான் கிளம்பும். வலிமையாக ஒரு போதும் வராது. வளராது.

உடைந்த மணியின் ஓசை ஒய்யாரமாகக் கேட்காது. கேட்பவர்களுக்கு எரிச்சல் ஊட்டுவது போல்தான் கிளம்பும்.

அது போலவே, நோயால் மெலிந்த உடலிலும், நோந்த மனத்தின் ஓலம்தான் கேட்குமே தவிர, வீராவேசமா வரும்.

ஆகவேதான் நலியாத உடலும், நோயால் மெலியாத தேகமும் ஒருவருக்கு வேண்டும் என்று எல்லோரும் விரும்புகின்றனர்.

வருவதற்கு முன்னர் காத்துக் கொள்கின்ற முன்னறிவுதான் மனிதகுலத்திற்கு மாபெரும் சக்தியாக விளங்குகிறது. அத்தகைய முன்னறிவுள்ள மக்கள் அந்த அற்புத சக்தியின் ஆற்றலால், நோய்கள் வராமல் எச்சரிக்கையுடன் வாழ வேண்டும்.

இந்த விருப்பத்திற்கு ஓர் உருவம் காண்கின்ற வகையில்தான். நீங்களும் நோயில்லாமல் வாழலாம் என்ற இந்த நூல் உருவாக்கப் பட்டிருக்கிறது.

எல்லாம் விதியின் செயல் என்று எல்லாவற்றிலுமே இருந்துவிட முடியாது. முடிந்தவரை முயற்சி செய்து உடலை நன்றாகக் காத்துக் கொண்டோமானால், வாழ்கின்ற காலம்வரை இன்பமாக வாழலாம்.

எத்தனை ஆண்டுகள் ஒருவர் உயிருடன் வாழ்ந்தார் என்பது பெருமையல்ல. எப்படி அவர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார் என்பதுதான் முக்கியம்.