பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


விளக்குக் கம்பத்தின்மீது திடீரென்று மோதி நின்றது. முன் பகுதி நசுங்கி விட்டாலும், கார் துடித்தவாறே சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. கூட்டம் கூடிவிட்டது.

இரண்டு நாள் கழித்துத்தான், வனிதாமணிக்கு பிரக்ஞையே வந்தது. கண் விழித்துப் பார்த்தாள். தன்னைச் சுற்றிலும் டாக்டரும் நர்சுகளுமாக இருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள். தன் உடலைப் பார்த்தபோது, ஆங்காங்கே ஒட்டும் கட்டுமாக இருந்தது. என்ன நடந்தது என்று பேச வாயெடுத்தபோது, அவளால் பேச முடியவில்லை. வாயில் பஞ்சு வைத்துக் கட்டியிருந்தார்கள்.

காரை ஓட்டிக் கொண்டிருந்த அவள், வேகத்தில் கார் மோதி நின்றதும், முன்புறமாக முகம் மோத, பற்கள் எல்லாம் இடிபட்டு கொட்டிப் போய் விட்டதை அவர்கள் கொஞ்சங் கொஞ்சமாக விளக்கிக் கொண்டிருந்தார்கள். ‘பல் போச்சு என்றால் சொல் போச்சு’ என்பார்களே, இனி எப்படி பேச முடியும்? பொய்ப் பல்லைக்கொண்டு, பாக்கி வாழ்க்கையைப் போக்க வேண்டியதுதானோ? அழகான பல் வரிசையை இழந்து அலங்கோலமாகி விட்டதைவிட இன்னொரு அதிர்ச்சி அவளுக்குக் காத்திருந்தது.

இடப்புறமாக உட்கார்ந்திருந்த பாலாம்பாளின் வலது கை நசுங்கி, ரணமாகி, சீழ் பிடித்தது. அதனால் உயிருக்கே ஆபத்து வரும் என்ற நிலையில், கையை மணிக்கட்டுடன் எடுத்து விடவேண்டும் என்ற முடிவெடுத்து, அது நிறைவேறியும் விட்டது என்று அறிந்ததும் வனிதாமணி ஓவென்று அலறினாள்.