பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஓடுகின்ற ஆறுதான் உதவி செய்தவாறு பயணம் செய்யும். ஓடி ஆடி பணியாற்றுகின்ற ஒருவரால்தான் பிறர்க்கும் நன்மை செய்து, தானும் நிம்மதியாக வாழ முடியும்.

அந்த அடிப்படையில்தான், இந்த நூலில் சில முக்கியமான கருத்துக்களைத் தொகுத்துக் கூறியிருக்கிறேன்.

இளமையிலே சோம்பேறியாக இருப்பவன். வயதானபின் பிச்சைக்காரனாகத் திரிவான் என்பது ஒரு பழமொழி.

இளமையிலேயே உடலை தூய்மையாக வைத்துக் காக்கத் தெரியாத ஒருவன். வயதான பின் நோயாளியாகத் தான் வாழ முடியும். அதற்காகத்தான், நோய் வராமல் காத்துக் கொள்பவர்களை புத்திசாலிகள் என்று அழைக்கிறோம்.

வருகிறது அபாயம் என்று உணர்ந்து கொள்வது பாதி அபாயத்தைத் தடுத்து நிறுத்தியதற்குச் சமம் என்பார்கள். நீங்கள் நோயில்லாமல் வாழலாம் என்று நினைத்து விட்டாலே, அது பாதி காரியத்தைத் தொடங்கியதாகவே அர்த்தமாகும்.

விரும்புகின்ற மனதுக்குப் பல வழிகளை, பல உபாயங்களை எளிதாகக் காட்டிவிடத் தெரியும். ஆராய்ச்சியுள்ளவனாக மாற்றுகின்ற அந்த மனம். பல அரிய சந்தர்ப்பங்களை உண்டு பண்ணவும் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளவும் கற்றுத் தந்து விடும்.

இன்று நீங்கள் விருப்பம் கொண்டிருக்கிறீர்கள், குறைவற்ற செல்வராக, நோயற்ற மனிதராக வாழ வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்கள்.

அதற்கான வழி வகைகளை மட்டும் கூறியிருக்கிறோம். நோய் வராததற்கு முன்னர் எப்படியிருந்தால் நல்லது என்பதை மட்டுமே இங்கே கொடுத்திருக்கிறோம். நோய் வந்து விட்டால், அது வைத்தியரின் வேலையாகி விடுகிறது.