பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல வாழ்க்கையே சிறந்த மதம் என்கிறார் ஓர் அறிஞர். நல்ல வாழ்க்கை என்பது நல்ல பண்புகளையும் பழக்க வழக்கங்களையும் கொண்டதாகும், ஆகவே, நல்ல வாழ்க்கையை வாழ, வழி காட்டும் முயற்சியில் இந்நூலை எழுதியிருக்கிறோம். படிப்பவர்கள் பயன் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

உடற்பயிற்சி செய்யத்தான் வேண்டுமா என்றால். உடல் உழைக்கத்தான் பிறந்தது. ஓய்ந்து கிடந்து உறங்கி மயங்கிக் கிடக்க அல்ல. உழைப்பும் ஓய்வுமே உல்லாசத்தைக் கொடுக்கும். உறங்கி ஓய்ந்து கிடப்பது உடலையே கெடுக்கும்.

உடலைக் கெடுப்பதும் கெடுத்துக் கொள்வதும் பண்புள்ளோர்க்கு அழகல்ல, இனி நீங்கள் படிக்கத் தொடங்கலாம், பழக்கத்திற்கும் கொண்டு வரலாம். நல்ல தொடக்கம் நன்மையையே இறுதிவரை அளிக்கும்.

உடல் நல நூல் வரிசையில் இதுவும் ஒரு நூலாகும். உடற்பயிற்சி என்று செய்ய விரும்பும் பொழுது, எனது உடற்பயிற்சி நூல்களைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

ஏற்கனவே விளையாட்டுக் களஞ்சியம் என்ற மாத இதழில் தொடர்ச்சியாக வெளிவந்த தொடரை நூலாக ஆக்கித் தருமாறு பல அன்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இரண்டாம் பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது.

சிறந்த முறையில் அச்சிட்டிருக்கின்றார்கள் கிரேஸ் பிரிண்டர்ஸார். நல்ல முறையில் நூல் வெளிவர உதவிய R. ஆடம் சாக்ரட்டீசின் பணி பாராட்டுக்குரியது.

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு, மேலும் ஒரு உடல் நலத்துறை நூலினைத் தந்திருக்கிறேன். அன்புடன் ஏற்று உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

‘லில்லி பவனம்’ டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

18.8.2000