பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நீங்காத நினைவுகள்

இப்போது அரணாக இருந்து காக்கும் என்றும் சுட்டிக் காட்டினேன். சொக்கலிங்கம் பிள்ளை அவ்வாறு எழுதத் தோன்றவில்லை யென்றும், அப்படித் தோன்றினாலும் தமக்கு எழுதத் துணிவு இல்லையென்றும் தெரிவித்தார். எனக்கும் அச்சமயம் கழுவாய் ஒன்றும் தோன்றவில்லை. மனம் குழம்பியது. நான் துறையூரை விட்டுக் காரைக்குடி வந்த பிறகும் (1950) ஒரு சில ஆண்டுகள் பள்ளியின் நினைப்பும் இருந்தது. கல்வியதிகாரிகளின் மாற்றங்களைப் பற்றி நாளிதழ்களில் பார்த்துக் கொண்டு இருந்தேன். இது பூர்வ வாசனையின் உறைப்பால் ஏற்பட்டதன் விளைவு. இப் புழக்கம் சொக்கலிங்கம் பிள்ளை விஷயத்தில் துணை செய்வதாக அமைந்தது.

நான் துறையூரில் இருந்தபோது (1944) நெருங்கிப் பழகிய மாவட்டக் கல்வி அதிகாரியின் நேர்முக அலுவர் (Personal Assiatant) எஸ். வீராசாமிப் பத்தர் மதுரை மாவட்டக் கல்வியதிகாரியாகப் பணியாற்றியதை அறிந்திருந்தேன். ஆகையால் சொக்கலிங்கம் பிள்ளையை அழைத்துக் கொண்டு ஒருநாள் மாலை 1953) மதுரை சென்றேன். கல்லூரி இல்லத்தில் (College House) தங்கினோம். இன்றிருப்பதுபோல் அஃது அன்றில்லை. பின்பக்கம் காலியிடம் அதனையடுத்து ஒரு சிறு உணவு விடுதி. தங்கும் அறைக்கு இருவருக்கும் மூன்று ரூபாய்க் கட்டணம் வாங்கியதாக நினைவு. அப்போது இட்டலி விலை மூன்று காசு தோசை ஆறு காக காபி ஒன்பது காசு என்பதாக நினைவு அதிகாலையில் எழுந்து நீராடி மீனாட்சி சொக்கலிங்கப் பெருமானைச் சேவித்தோம். வந்த காரியம் வெற்றியடைய வேண்டும் என்று அம்மையப்பரை வேண்டிக் கொண்டோம். தரிசனம் முடிந்து ஏழரை மணிக்குத் திருக்கோயிலை விட்டு வெளி வந்தோம். அறைக்கு வந்து உட்புறமாக இருக்கும் உணவு விடுதியில் சிற்றுண்டி கொண்டோம். எல்லாம் சாவகாசமாக நடைபெற்றன. அறைக்கு வரும்போது மணி ஒன்பது.

மதுரை மாவட்டக் கல்வி அதிகாரியின் அலுவலகம் மதுரை நகரப் பேருந்து நிலையத்திற்கு எதிரில் உட்புறமாக இருந்தது.