பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

தங்கள் தந்திரம் பலித்ததென்று சமயோசிதமும் அவன் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்து வாய்கிழியச் சிரித்தார்கள்.

அரக்கனுக்குச் சொந்தமான பசுக்கள் மொத்தம் நாற்பது இருந்தன. அவை அனைத்தும் மலையின் மறு சரிவில், மேயவிடப்பட்டிருந்தன. நாற்பது பசுக்களுக்கும் எவ்வளவு சாக்குப் பொன் கிடைக்கும் என்று நடந்து செல்லும் போதே கூட்டிப் பார்த்துக் கொண்டான் அரக்கன். நான்கு நான்காக நாற்பது தடவையும் கூட்டிய பிறகு நூற்று அறுபது சாக்கு கணக்கு வந்தது. உடனே அவன் ஒட்டமும் நடையுமாகத் தன் மாளிகைக்கு வந்து சேர்ந்தான். தன் வேலைக்காரனைக் கூவியழைத்தான். "போ போ! உடனே போ! என் பசுக்கள் எல்லாவற்றையும் கொன்று தோலையுரித்து எடு! அந்தத் தோலையெல்லாம் பக்கத்து ஊர் சந்தைக்குக் கொண்டு போ. ஒரு தோலுக்கு நான்கு சாக்குத் தங்கம் வீதம் விற்றுக் கொண்டு வா. உடனே தாமதிக்காமல் இன்றே சந்தைக்குப் போய்விடு. நீ தாமதித்தால் மாட்டுத்தோல் விலை இறங்கி விடக்கூடும். போ! போ! சிக்கிரம் போ!' என்று வேலைக்காரனை ஏவினான். .

கட்டளையிட்டபடியே வேலைக்காரன் நடந்தான். ஆனால் அவன் சந்தைக்குப் போய் மாட்டுத் தோலை வைத்துக் கொண்டு விலை கூறியபோது எல்லோரும் அவனைப் பார்த்துக் கேலி செய்து சிரித்தார்கள். அதுதான் மாட்டுத் தோலுக்கு அப்போது உள்ள விலைவாசி என்று வாதாடினான். ஆனால் அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று எல்லோரும் பரிகாசம் பண்ணினார்கள். கடைசியில் அவன் மாட்டுத் தோல் ஒன்று ஒரு ரூபாய் வீதம் விற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தான்! மாளிகையில் அவனுக்கு எப்படிப்பட்ட வரவேற்புக் கிடைத்திருக்கும் என்பதை எளிதாக யூகித்துக் கொள்ளலாம்.

நீ.மு. - 5