பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66



கிழே தோட்டக்காரன் வீட்டில் எல்லோரும் சாப்பிடுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். குழம்பு அப்போது தான் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது. அந்தச் சமயம் அரக்கன் வருகிறானா என்று காவல் காத்துக் கொண்டிருந்த பெரிய பெண் "அப்பா! அப்பா அரக்கன் மலையில் இருந்து இறங்கிக் கொண்டிருக்கிறான்!" என்று அலறிக் கொண்டு ஓடி வந்தாள்.

இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயோசிதம் "சிக்கிரம் சிக்கிரம்! இந்தச் சட்டியை வெளியில் துக்கிச் செல்ல வேண்டும். கூட ஒரு கை பிடி" என்று தன் மனைவி யிடம் கூறினான்.

அவன் மனைவி ஆவுடையாளும் அவனும் கந்தைகளை வைத்துப் பிடித்துக் கொண்டு குழம்புச் சட்டியை வெளியில் இருந்த புல் தரையில் கொண்டுவந்து வைத்தார்கள். பிறகு சமயோசிதம் ஒரு சவுக்கை எடுத்துக் கொண்டு, அந்தக் குழம்புச் சட்டியை ஓங்கி ஓங்கி அடித்தான். "சட்டியே, சிக்கிரம், சிக்கிரம்! நாங்கள் பசியோடு காத்துக் கொண்டிருக்கிறோம்" என்று கூறிக் கொண்டே அதை ஓங்கி ஓங்கி அடித்தான்.

அப்போது அரக்கன் தன் தண்டாயுதத்தை ஓங்கிக் கொண்டே, "புரட்டுக்காரத் திருட்டுப் பயலே இரு, இரு! இதோ உன்னை என்ன சேதியென்று விசாரிக்கிறேன்" என்று கூவியபடி நெருங்கினான். ஆனால் சமயோசிதம் அவனை கவனிக்காமல், சட்டியை ஓங்கி ஓங்கிச் சவுக்கால் அடித்துக் கொண்டிருந்தான். இதைக் கண்ட அரக்கன் பெருந்தலைப் பிரசண்டன், வியப்பினால் செத்த பிணம்போல் நின்று விட்டான். "தோட்டக்காரா! என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா?" என்று கேட்டான்.