பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83



மூன்று பெண்களும் இருக்குமிடத்திற்குத் தன் குதிரையைச் செலுத்தினான். அவர்கள் எதிரில் வந்ததும், கடைசிப் பெண்ணான கோமளாவை நீண்ட நேரம் உற்றுக் கவனித்தான். பிறகு அவன், "உன் கனவின்படியே நீ ராணியாவாய்!" என்று கூறினான்.

கோமளா உண்மையில் நல்ல அழகி, மன்னன் தேவப்பிரியன் அவள் அழகில் மயங்கினானோ அல்லது அன்று காலையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த அவன் மேலும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினானோ அல்லது தன் சிற்றன்னையே ஏவலாட்களுக்கு உத்தரவு போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போய்விட்டானோ, என்னவோ தெரியவில்லை. அவன் அந்தக் குடியானப் பெண் கோமளாவைத் தன் குதிரையில் ஏற்றி வைத்துக் கொண்டு கடற்கரையோரமாக இருந்த தன் கோட்டைக்குப் போய் யாருடைய யோசனையையும் கேட்காமல் அவளை அங்கேயே அப்பொழுதே திருமணம் செய்து கொண்டு விட்டான்.

இதைக் கேள்விப்பட்ட அவனுடைய சிற்றன்னை பானுமதி எவ்வளவு கோபப்பட்டிருப்பாள் என்று எளிதாக யூகித்து கொள்ளலாம். ராஜாவின் மனைவியாக புதிய ராணியொருத்தி வந்து விட்டபடியால், இனிமேல் அவள் அரண்மனையில் முழுக்க முழுக்க அதிகாரம் செலுத்த முடியாது. அரண்மனைக்கு வருகின்ற விருந்தாளிகளை ஆடம்பரத்தோடு அவள் முன்னின்று வரவேற்க முடியாது. ராஜாவோடு அவன் மனைவியான ராணிதான் நின்று வரவேற்க வேண்டும். ராணி என்ற முறையில் நாட்டினர் கொடுக்கும் மரியாதை முழுவதும் புதியவளுக்கே கிடைக்கும். இவற்றையெல்லாம் காட்டிலும் மோசமாக பானுமதிக்குத் தோன்றியது என்னவென்றால், தன்னைக் காட்டிலும் உயர்ந்த நிலைக்கு வந்திருப்பவள் ஒர் அரசகுமாரியாகவோ அல்லது பிரபு மகளாகவோ இல்லாமல் ஒரு சாதாரணக குடியானவன் மகளாக