பக்கம்:நூறாசிரியம்.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

75


அறிவும் இக்கால் குவிதலுறும். இதனையே அஃகிய அறிவு என்பர் திருவள்ளுவர். அறிவினதும், மனத்தினதும் பிறவாந் தன்மைகளைத் தேவையுற்ற விடத்து மீண்டுங் கூறுவாம்.

ஈண்டு முதற்கண் பிறருடைய நினைவுகளை வாங்கும் தன்மையுடைய தாகலின் நெஞ்சு எனப்பெற்றது. அது தான் வாங்கும் நினைவே தன்னை வளர்த்துக் கொள்ளப் போகும் உணர்வு மரத்திற்கு வித்தாக அமைதலின் நினைவு வித்து எனப் பெற்றது. வித்து ஊன்றப் பெறுதற்கு அமைந்ததாகலின் இவ்வக வுறுப்பு நிலமென்று கொள்ளப் பெற்றது.

நெஞ்சும் நிலமும் நில் என்ற ஒரேயடியாக பிறந்த இரு சொற்கள்.

வித்து- விள் என்னும் வேரடியாகப் பிறந்த சொல். விள்ளுதல்-விளங்குதல்-வெளிப்படுதல்-வெடித்தல்-மலர்தல்-விரிதல்-விளங்குதல்வேறுபடுதல் முதலிய வினையொழுங்கை நிரல்பட உணர்த்தும் ஒர் அரிய சொல். விள்+து= வித்து. வெளிப்படக்கூடியது-விரிவடையக்கூடியது விளங்குந் தன்மையது; மலருந் திறத்தது; இதனின்று பிறிதொன்றாய் வேறு பட்டு வளருந் தன்மையது என வரும் பல பொருள்களை உள்ளடக்கிய ஒரு சொல்லும் அச் சொல்லுக்குரிய பயனுமாகும்.

வித்துக்கு மூலம் விள், அதன் மூலம் பிள் பிள்-பிளவுற்றுப் பிரியும் தன்மையது.

பிள்-பிள்ளை (தாயினின்று பிரிவது) , பிளவு-ஒன்று இரண்டாதல்.

பிள்-பிண்-பினம்-உயிர் வேறு மெய் வேறாய்ப் பிரிதல் நிலை. உயிர் பிரிய எஞ்சிய உடல்.

பிள்-விள்-வெள்-ஒள், பிள்+து=பித்து விள்+து=வித்து வெள்+இவெளி, ஒள்+இ-ஒளி.

ஒளி வடிவாயும், வெளிவிரிவாயும், வித்து நிலையாயும் நிற்கும் புடவியின் மூலக் கரு வித்தும் பித்தும் ஆகும்.

வித்து- வித்தன்-வித்தகன், பித்து-பித்தன்-பிச்சன்-பிஞ்சகன்-பித்தகன் என வெளிப்படும் இறைப் பொருளணர்த்தும் மூலச் சொற்களை ஒர்க,

இனி, வெளிப்படும் தன்மையுடைய பொருள்கள் யாவும் சூடுறுதல் வேண்டுமாதலின் வித்தென் சொற்கும், பித்தென் சொற்கும் சூட்டுப் பொருள் உண்டு.

வித்து- விந்து-குடும் ஒளியும் சான்ற மூலப் பொருள்.

பித்து-பித்தம்-சூடு, பித்து-பிச்சு-உடலிற் சூடு எழுப்பும் உள்ளுறுப்பு.

இவ்வுலகத்துத் தோன்றிய நுண்ணியதோர் அணுவிலும் இப் புடவியின் (பிரபஞ்சம்) விளக்கம் இருப்பது அண்டபிண்ட உண்மையாகும். அண்டம் பல நிறைவது அகண்டம் அண்டம் பிளவுற நிற்றல் பிண்டம். அண்டத்தின் மூலம் அணு, இவ்வுண்மைகள் போலவே இவ்வுலகத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/101&oldid=1181857" இலிருந்து மீள்விக்கப்பட்டது