பக்கம்:நூறாசிரியம்.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

131

துய்த்தல் அரிது; அவ்வாறு துய்க்கும் வழி அந்நிலை ஏதும் இல்லாதவர்க் உளம் மகிழ்வடையும்படி கொடுத்து உதவுதலே ஆகும்,என்று உலக வியற்கையை உணர்த்திக் கூறியதாகும் இப் பாட்டு.

செல்வம் நிலைப்படாதது; சுழற்சியுடையது. அஃது ஒரிடத்தே வந்து சேருங்கால் மனவெழுச்சி யுண்டாதலும், பிரிந்து செல்லுங்கால் மனவழற்சி ஏற்படுதலும் மாந்தநிலையில் இயல்பாந் தன்மைகளே. ஆனால் இவ்விரு நிலைகளினும் வேறுபாடு காணாத மெய்யறிவினார், அவற்றை ஒன்று போலவே கருதுவர். கருதித் தமக்குச் செல்வம் வந்துற்றுழி அதன் பயனை எல்லார்க்குந் துய்ப்பக்கொடுப்பர்.அவ்வறிவில்லாதார் அவ்வாறு கொடாது, அதன் முழுப்பயனையும் தாமே துய்க்கக் கருதுவர். ஆனால் அவர் துய்ப்பதற் குள் அச்செல்வம் அவரைத் துறந்து பிறிதோரிடம் சேரும். இந்நிலையில் அச்செல்வத்தின் பயனை இவரும் பெறாது, இவரைச் சேர்ந்தவரும் பெறவிடாது நிற்பர். எனவே உலகவியல்புக்கு மாறாகிய இந்நிலையை அனைவரும் கடைப்பிடியாது தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தாம் பெற்ற விடத்துச் செல்வத்தைப் பிறர்க்கும் பகிர்ந்துவுதலே அச்செல்வத்தைக் துய்க்கும் வழியென்பதை அறிவுறுத்தியும் கூறப் பெற்றது என்க.

என்னை, பெற்றவிடத்துப் பிறர்க்குப் பகிர்ந்து உதவுதல் அச்செல்வத்தின் பயனை முழுவதும் துய்ப்பதாகுமோ என்பார்க்கு. அவ்வாறு முன்னர்ப் பகிர்ந்து கொடுத்த உதவியைப் பெற்றாரும், பின்னர்த் தாம் செல்வத்தைப் பெறுங்கால் தாம் பெற்ற அளவாகினும் திருப்பிக் கொடுக்கக் கடவர். ஆகலின், முன்னர்க் கொடுத்த செல்வம் ஒரிடத்துக் காக்கப் பெற்றுத் தக்கவிடத்து நமக்குத் திரும்புதல்போல் ஆவதால், அந்நிலை அச்செல்வத்தை முழுதும் துய்த்ததாகாதோ என்க. இனி, முன்னர்ப் பெற்றார், தாம் பெற்ற அளவினும், தம் நன்றி புலப்படக் கூடுதலாகக் கொடுப்பதும் நிகழ்வதாகையால், அந்நிலையில் நம் சிறிய செல்வம் பேரளவில் பயன் நல்குதலும் கருதத் தக்கதாம் என்க.

அவ்வாறின்றி, நாம் ஒரு நிலையில் பெற்ற செல்வத்தை ஒருவர்க்கும் கொடாது நாமே துய்க்க விரும்பிக் காத்து வைத்தல், இல்லாத பிறர் அதனைக் கவர இடந்தருவதும், இருக்குங் காலத்து நாம் கொடாததால், நாம் அதனை இழந்து துன்புறுங் காலத்துப் பிறரும் நமக்குக் கொடுக்க விரும்பாததும், செல்வத்தை எவ்வாற்றானும் நுகராத நிலைகளாம் என்க. எனவே பெற்ற செல்வத்தைத் துய்க்கும் சிறந்த வழி அதனைப் பலர்க்கும் பகிர்ந்து உதவுதலே என்று உறுதியாகக் கடைபிடிக்க என்பதாம்.

நிலமுதுகு - நிலக் கோளத்தின் வளைந்த புறமேடு, நீரோ ஒளியோ ஒடுதற்குத் தட்டையினும் உருண்டு வளைந்த நிலையே சமவோட்டந் தருமாகலின் ஒடுகிற நிழலைக் குறிக்குமிடத்து, வளைந்த நிலத்தையும் கருதவேண்டியிருந்ததென்க.

ஒருபுறம் - ஒரு பாதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/157&oldid=1220841" இலிருந்து மீள்விக்கப்பட்டது