பக்கம்:நூறாசிரியம்.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

நூறாசிரியம்


‘மிக்க இனிப்பான பொருள் விரைவில் புளித்துப் போவது உறுதி. நினக்கு ஒரு மகன் பிறந்தவுடன் நின் உடல் அவனுக்கு இனிப்பற்றதாகியது. எனவே உடல் இனிப்பு நாடி அவன் தீயொழுக்கம் மேற் கொண்டான். இனி, அவளுடைய உடல் இனிப்பதாயினும் அவள் உள்ளம் புளிப்பதாகலின் அந்நிலை உணர்ந்து அவன் விரைவில் திரும்புவான். அக்கால் நீ வரவேற்காமலேயே அவன் நின் கடைவாயிலில் ஒரு திருடனைப் போல் புகுவான். நீ கவலற்க’ என்றாள் என்க.

தீயொழுக்க முற்றவனாகலின் முன்வாயில் வழி வாராது கடை வாயில் வழிப் புகுவான் என்றாள்.

இனி, 'புகுவான்’ என்றதால் ‘நீ வரவேற்க வேண்டியதில்லை’ என்றாள் என்க.

இனி, 'மும்முறை வணங்கி யெழுந்தனை யன்றே' என்று முற் கூறியதால், அவனும் தன் தீயொழுக்கத்திற்கு வருந்தி, நாணுற்று, தன்னைப் பொறுத்தல் வேண்டி நின்பாலும்,நின் பெற்றோர்பாலும் அவன் பெற்றோர்பாலும் வணங்கி எழுவான் என்றும் குறிப்புப் பொருள் புணர்த்திக் கொள்க.

ஒரு தோழமையின் கடமை, தன் அன்புக்குரியார் துன்புற்ற விடத்து அவரை அன்பால் அணுகி, அறிவால் தேற்றி, நேர்ந்த நிகழ்ச்சியை உலகியலறிவால் தேர்ந்து விளக்கி, அவர் துயரை மாற்றுவதே யாகவின் ஈண்டு தலைவிக்குற்ற மெய்த்தோழியும் அவளின் அகப்புறத் துயரை அணுகி ஆய்ந்து அத்துயர் விரைவில் மாறுவதே என்று ஒர் இறைச்சிப் பொருள் நிறை உவமத்தால் எடுத்து விளக்கியும், அவட்குத் துயர் விளைவித்தவர் நாணும்படி அவள் பெருமையுறுவது உறுதி என்று கூறியும் தேற்றினாள் என்பதையுணர்த்துவதாகும் இப்பாடல்.

இது, பாலை பெண் திணையும், தலைமகன் பரத்தை வயப்பட்ட ஆயிடைப் பிரிவின் கண், தலைமகள் கவன்று கையறத் தோழி தேற்றியது என் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/164&oldid=1221005" இலிருந்து மீள்விக்கப்பட்டது