பக்கம்:நூறாசிரியம்.pdf/171

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

145


தலைவன் முல்லை நிலத்தவனாகலின் அவற்குப் பொருந்திய ஒர் உவமையால் உணர்வித்தாள் என்க.

நாம் அவற்கு - நாம், நம்மை ஏமாற்றும் அத்தலைவனுக்கு.

தலைவியே தலைவனோடு புணர்ந்தாள் எனினும், தோழி தன்மைப் பன்மையிற் பேசுவது, அவளுக்கு வந்த இழிவு தனக்கும் ஆகும் என்பதால் என்க.

இளமை நலம் - இளமையாகிய பெண்மை நலத்தை,

அழிப்பது - அழித்துக் கொள்வது.

உரிமையில் புணர்ச்சி உளத்தைத் தாக்கி உடல் நலத்தையும் கெடுக்குமாகலின் நலம் அழிப்பது என்று கூறினாள் என்க.

உறவும் ஒக்கலும் ஊரும் அறியாது தம்மைக் களவின் ஈடுபடுத்திப் புணர்தல் மேற்கொண்டொழுகும் தலைவனும் தலைவியும் தம் நிலையைத் தாமே நன்கு உணர்தல் பொருட்டுத் தோழி அவர்க்கு அறிவுறுத்தியதாகும் இப்பாடல்.

இது குறிஞ்சி யென் திணையும், இரவுக்குறி வந்து தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைவிக்குச் சொல்லிய தென் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/171&oldid=1221038" இலிருந்து மீள்விக்கப்பட்டது