பக்கம்:நூறாசிரியம்.pdf/193

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

167


35 பேதை மடமகள்


பெறல்தந் தாளே பெறல்தந் தாளே!
அறம்படு நெஞ்சின் அல்லோர்க் கிணங்கி
அழனிற மேனி ஆம்பியற் சாம்ப,
குழலுகச் செங்கண் குழிந்துவெள் ளோடக்
கழைதோள் கூனிக் கவின்கெட, வைகல் 5
மதியம் போலும் முகவொளி மழுங்க
துதிவெடிப் புண்டு மடிநணி வறல,
அறலென அடிவயிறு மடியத் திறலறப்
பெறலே வினையாப் பேதை மடமகள்
பொறையோர் பொறைகெடப் பெறல்தந் தாளே! 10

பொழிப்பு:

(குழந்தைகள் பலவாகப்) பெற்றுத்தந்தவளே! பெற்றுத்தந்தவளே! அறம் அழிந்து போன நெஞ்சையுடைய பொல்லாதவர் பலரின் தழுவலுக்கு இணங்கி, தீயைப் போலும் சிவந்த ஒளிபொருந்திய மேனி, காளானைப் போல் நிறம் வெளிர்ந்து சாம்பிப் போகும் படியும், அடர்ந்த கூந்தல் உதிர்ந்து அழகிழக்கும் படியும், சிவந்த கண்கள் குழிவு எய்தி வெளிர்நிறம் பாயுமாறும், மூங்கில் போலும் ஒளியும் அழகும் வாய்ந்த இளந்தோள்கள் கூனலுற்று, அழகு கெடும்படியும், காலை நேரத்தில் புலப்படும் முழுநிலவு போல் முகத்தின் ஒளி மழுங்கித் தோன்றுமாறும், காம்புகள் வெடிப்புற்று முலைகள் நன்கு வறண்டு தொங்கும் படியும், மணல் அலைகளென அடிவயிறு மடிந்து விழும்படியும், தன் உடல் திறம் முழுவதும் அற்றுப் போகுமாறும், பெற்றுத் தருவதையே வேலையாகக் கொண்டு பேதைமை சான்ற அவ்வேழைப்பெண், பொறுமையே குணமாகக் கொண்டவர்கள் கூட இவள் செயலைக் கண்டு பொறுமை இழக்கும் படியும், பல குழந்தைகளைப் பெற்றுத் தந்தவளே!

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது. அவள் தலைவன் நயந்த பரத்தை எத்திறத்தாள் என வினவிய தோழிக்குத் தலைவி, “அவள், அறம் போகிய இருண்ட நெஞ்சையுடையப் பொல்லாதவர் பலர்க்கும் இணங்கி, ஒளி பொருந்திய உடல் வெளிறிப் போகும் படியும், அடர்ந்த குழல் உதிர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/193&oldid=1220724" இலிருந்து மீள்விக்கப்பட்டது