பக்கம்:நூறாசிரியம்.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

நூறாசிரியம்

அலவே சிறந்தன: இவை அல்லவே சிறந்தன.

ஒவத்தெரு முதல் அறம் பிறழ் வினைகள் ஈறாக நகரக் காட்சிகளையும், மாட்சிகளையும் கூறி வந்த தந்தையார், தம் மகன் அவற்றின் அழகிலும், புனைவிலும், நடையிலும் உள்ளமும் உடலும் பறி கொடுத்துத் தன் கல்வியைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்கின்ற குறிப்புத் தோன்ற, ‘மகனே! இவையல்ல சிறந்தன' என்பார். ,

சிறந்தன அல்லவே என்னும் உரை மரபை மாற்றி, 'அல்லவே சிறந்தன' என்று உறுதிப்பொருள் தோன்றவும், 'நீ கவனிக்க வேண்டிய, சிறந்த பொருள் வேறொன்று உண்டு' அஃது இசைபெறு கல்வி- என்னும் குறிப்புப் பொருள் தோன்றவும் கூறினார் என்க.

இசைபெறு கல்வி- புகழைப் பெறுவிக்கின்ற கல்வி. இது காறும் கூறியவை கடலில் உள்ள சுழல்கள் போலும் நகரில் உள்ள சூழல்கள். இனிமேற்றான், நீ அங்குப்போய் எந்த நோக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லப் புகுகின்றேன்’ என்று கூறியவர் கல்வி கற்க வேண்டும் என்றுகூட நேரிடையாகச் சொல்லாமல், ‘புகழைத் தருகின்ற கல்வியைத்தான் நீ கற்கவேண்டும்; ஆனால் அதைவிட உயர்ந்த ஒழுக்கத்தை நீ எப்பொழுதும் கைவிடல் கூடாது’ என்று இரண்டையும் இணைத்துப் பேசுவதுடன், கல்வியை விட ஒழுக்கத்தை உயர்வு படுத்தியும் பேசுகின்றார்.

“புகழ்பெற வைப்பது கல்வி என்று ஆனாலும் அந்தப் புகழைத் தாங்குவதற்கு உடல் வேண்டும்; அந்த உடலில் உயிர் வேண்டும். அந்த் உடலும் உயிரும் இணைந்து இயங்கித்தான் புகழாகிய கல்வியைத் தாங்குதல் வேண்டும். நலமில்லாத உடல், அல்லது உயிரில்லாத உடல் கல்வியைப் பெற்றுப் பயன் என்னையோ, ஆகலின் உடலும் உயிரும் ஒருமிக்க நலத்துடன் இயங்கவேண்டும்; அதற்கு ஒழுக்கம் வேண்டும். “ஒழுக்கமில்லாத உடல் உயிரில்லாத உடம்பு ஒழுக்கத்தை உயிர் என்று சான்றோர் கூறியது இதன் பொருட்டே ஆகும். எனவே, புகழ் தருகின்ற கல்வி கற்பதற்காகச் செல்கின்ற நீ, அதனை மட்டும் நினைந்து கொண்டிராமல், ஒழுக்கம் அதனினும் உயர்ந்தது,ஏர்ந்தது, சிறந்தது என்றும் நினைந்து கொண்டிருக்க வேண்டும்” என்று விளக்கச் சுருக்கமாகத் தன் மகனிடம் கூற விரும்பியவர், 'இசைபெறு கல்வியின் ஏர்ந்தன்று ஒழுங்கே’என்று கூறுகின்றார். ஏர்ந்தன்று-ஏர்ந்தது. ஏர்தல்-உயர்தல்.

வசை பெறு வாழ்வின் மாய்கை நன்றே - வசைபெற வாழ்வதைவிட மாய்ந்து போவது நல்லது.

“இசை தருவது கல்வி; வசை வராமல் காப்பது ஒழுக்கம் இசை பெறுவதைவிட வசை வராமற் காக்கும் ஒழுக்க வாழ்க்கையே ஒருவர்க்கு வேண்டும். அவ்வாறு இன்றி, வசை பெறும்படி ஒருவன் ஒழுக்கத்தைக் கைவிட்டு விட்டு, வாழ்வதைவிட அவன் மாய்ந்து போவது நல்லது. நீயும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/208&oldid=1208931" இலிருந்து மீள்விக்கப்பட்டது