பக்கம்:நூறாசிரியம்.pdf/221

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

195

நூறாசிரியம்

மற்றுந்தன் உண்மையறிவே மிகும் (குறள் 373) என்றவிடத்துச் சுட்டிய முன்னைய உண்மை அறிவால் என்க. அவ்வறிவுணர்வான் கிளர்ந்தெழுந்து புறமனத்துக்கே புலப்படாத உள்ளுணர்வு நிலைகள் அவை.

அழிஉணர்வின் சிலவே- அவ்வாறெழுந்து அவ்வாறே அழிந்து போகின்ற உள்ளுணர்வு நிலைகள் சிலவாம் என்க.

உறக்கத்தெழுந்து உயிர்ப்பு ஊர்வன சிலவே- அவ்வாறு அங்கேயே அழிந்த உணர்வு நிலைகள் கழிய, அடிமனத்தினின்று வெளிப்போந்து புறமனத்தின் கண்ணே உணர்வின் அளவாக ஊர்ந்து நிற்கும் உணர்வு நிலைகள் சிலவாம் என்க.

இவ்வுணர்வு நிலைகளுட் சிலவே கனவு நிலைகளுட் புலப்படும் புறமன உணர்வலைகள்.

கண்படப் புலர்ந்த -ஆழ்ந்துறங்காது கட்புலனும் அதனையடுத்த பிற புறப்புலன்களும் அடங்கிய நிலையிலும், புற அறிவு அடங்கா நிலையிலும், புறமனத்தே புலர்ந்து தோன்றுகின்ற.

கனவின சிலவே - கனவாகும் உணர்வு நிலைகள் சிலவாம் என்க.

எண்படு கனவின்- எண்ணிக்கையழிந்த கனவு நிலைகளின் எண்ணற்ற கனவுகளுள் எண்ணிக்கைக்குட்படாதன பல உள. அவை போக நம் புற அறிவின் எல்லைக்குள்வந்து புகுந்து நாம் நினைவுநிலையில் வைத்து எண்ணிப் பார்க்க முடிந்த கனவு நிகழ்ச்சிகள்,

எதிர்வன சிலவே- அக்கனவு நிகழ்ச்சிகளுள் நினைவுள் எதிர்ந்து தோன்றுவன சிலவே எதிர்தல்-எதிர் ஒளிர்தல் (Reflection) நினைவு நிகழ்ச்சியைச் சாக்கிரம்’ என்னும் உட்சொல்லாற் குறிப்பர் சிவனியமெய்ந் நூலார்.

கனவு பலவற்றுள்ளும் சிலவே நினைவுள் தோன்றும்.

நினைவுள் உயிர்த்தழி நீர்மைய சிலவே - அவ்வாறு நினைவுள் தோன்றும் உணர்வுகள் பலவற்றும் காலப்போக்கில் அழிந்து போகும் புல்லிய உணர்வுகள் சில. அவ்வாறு போனவை கழிய எஞ்சுவனவும் மிகச்சிலவாம் என்க.

உயிரொடும் உடலெனும்....சிலவே- அப்புகழ் பெறும் மிகமிகச் சிலவாம் மாந்த உயிர்களுள், இறுதிவரை உடலளவானும் தொடர்பு கொள்ளும் உயிர்களோ மிகவும் சிலவே என்க. என்னை? உலகியல் தொடர்பாகப் பிறிதோர் உயிர் நின்ற உடலொடு பொருந்தி, அவ்வுடல் அழியுங்கால், அத்தொடர்பையும் அறுத்துக் கொள்ளும் தன்மையுள்ள பொது உயிர்கள் சில என்க. பல உயிர்கள் அவ்வாறு உடலளவானும் தொடர்பு கொள்ளாது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/221&oldid=1209003" இலிருந்து மீள்விக்கப்பட்டது