பக்கம்:நூறாசிரியம்.pdf/223

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

197

எம்மின் குன்றும் மறவார் - எம் குழலை மோந்தவர், எம்மையும் யாம் வதியும் எம் குன்றையும் மறவாமல் நினைத்து விரைவில் மீண்டும் வந்து மணப்பார் என்றபடி

குழலை மோந்தவர், அக்குழலிற் சூடிய பூவின் மணத்தையும், அம்மணம் நிறைந்த பூ மலரும் குன்றையும் யாங்கன் மறத்தற் கியலும் என்றாள் என்க.

'புறவுலகம் மறந்த ஆழ்ந்த உறக்கத்து எழுந்து தோன்றும் பல்லாயிரங்கோடி உணர்வு அலைகளுள் அழிந்தன போக எஞ்சியவை சிலவாம்; அவற்றுள் மேனிலை உணர்வுக்கு வந்து உயிரியக்கத்தொடு கலந்து நிற்கும் உணர்வுகளோ மிகச்சில; அவற்றுள் பல அழிந்தவை போக, கட்புலன் முதலிய புறப்புலன் ஒடுங்கிப் புறஅறிவு ஒடுங்காத துயில் நிலையில் கனவுகளாய் முகிழ்க்கும் பன்னூறு உணர்வு நிலைகளுள், நினைவு நிலையில் எதிர்ந்து தோன்றுவன மிகமிகச் சிலவாம்; அவற்றுள்ளும் நிகழ்ச்சிகளாக மலர்வன மிகவும் சிலவாம்; அந்நிகழ்ச்சிகளுள்ளும் தனக்கு மட்டும் பயன்படும் நிகழ்ச்சிகள் சிற்சிலவாம், அச்சிற்சில நிகழ்ச்சிகளுள்ளும் பிறர்க்குப் பயன்தரும் நிகழ்ச்சிகள் மிகச் சில அவற்றுள்ளும் பிறர் பயன் படுத்திக்கொள்வன மிகவும் சிற்சில; அவற்றுள் புகழ்ச்சிக்குரியனவோ இன்னுஞ் சில; அத்தகு புகழ்ச்சி வினைகளைச் செய்யும் உயிர்களோ உலகில் சிற்சிலி அச்சில மீமிசை மாந்த உயிர்களுள் சிலவே இவ்வுலக வாழ்வின் இறுதிவரை தாம் நட்புக்கொண்ட உடலொடு தொடர்புடையன மிகச் சிலவே என்க. (பிறவெல்லாம் எழிலொடும் இளமையொடும் கழிவன) அத்தகு தேறிய உடல் தொடர்புற்ற சிற்சில உயிர்களுள் மிகவும் சிலவே தாம் நட்புக் கொண்ட உயிர்களோடு இறுதிவரை பொருந்தி உறைந்து நிலையான இன்பம் பெறுவன. இவ்வுயிரியக்க உண்மைகளை எம்மொடு தொடர்பு கொண்ட எம் தலைவர் தேர்ந்து உணர்ந்துளார். ஆகையால், அவரொடு யாம் கொண்ட தொடர்பும் வெறும் உடல் தொடர்பினது அன்று உயிர்த் தொடர்பினது. எனவே எம் உயிரியங்கும் இவ்வுடலையும் அது வதியும் இக்குன்றையும் அவர் மறத்தற்கியலாது; எம்மொடு புணர்ந்த காலத்து எம் கூந்தல் மணத்தையும் அதற்கு ஏதுவாகிய மணமிகுந்த மலரையும், அது மலரும் இக் குன்றையும் அவர் நினைவுகூர்ந்து விரைவில், எம்மை மணந்து கொள்ளுதற்குரிய பொருளை ஈட்டிக் கொண்டுவந்து என்னை மணந்து கொள்வார்; எனவே, தோழி! நீ அவர் பற்றி ஐயப்படாதொழிக'-என்று தலைவி தெருட்டிக் கூறினாள் என்று கூறியதாகும் இப் பாடல்.

இது, பாலை யென் திணையும், வரைவிடை வைத்த பிரிவினை ஐயுற்ற தோழியைத் தலைவி தெருட்டிக் கூறியது என்னுந் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/223&oldid=1209012" இலிருந்து மீள்விக்கப்பட்டது