பக்கம்:நூறாசிரியம்.pdf/253

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

227

செய்யுள் தோன்றுவதற்கு உள்ளத்தில் நல்ல கரு ஒன்று உருவாகல் வேண்டும். இனி, ஒருவரைப் புகழ்ந்து பாடும் செய்யுளாயின், அதற்குத் தகுமாறு கருவாக அமைபவர்"ஒருவர் இருத்தல் வேண்டும். அத்தகையவர் செயல்களையோ, அறிவு நிலைகளையோ, கொடைத் தன்மையினையோ, வீரவுணர்வையோ, வெற்றி தோல்விகளையோ, தொண்டு நிலைகளையோ, நல்லற வாழ்க்கையினையோ கருவாகக் கொண்டு, அவரின் உயர்வாந் தன்மைகளைப் பிறரும் பின்பற்றவேண்டிப் புலவர்கள் அவர் பற்றிய செய்யுள்களைப் பாடி மகிழ்வர். ஆனால் அவ்வாறு ஒருவர் மேல் உவந்து பாடி மகிழ்கின்ற நிலையில் இற்றைக் காலத்து எவரும் இலர். எனவே, அத்தகைய ஒருவர் தோன்றும் வரை யாரைப் பாடுகோம் என்று வருந்திக் கூறியதாகும் இப்பாடல்.

உண்மைப் புலமை மனத்தைக் கவர்கின்ற இனிதாந்தன்மை நிறைந்தவர் இக்காலத்து எவரும் இலரே, இனி, எவரைப் பாடுவோம் என்று கவல்வது.

யாவர்ப் பாடுகம்-யாது சிறப்புக் கருதி இக்காலத்து யாவரைப் பாடுவோம்.

கழகம் - புரந்தோர் - தமிழ்க் கழகத்தை முதல், இடை, கடை என்று மூன்று முறை நிறுவி முத்தமிழ் மொழியைப் புரந்த சான்றோர்.

அன்றே மாயந்தனர்- அக்காலத்திலேயே மாண்டு போயினர். இல்லெனின் நான்கு, ஐந்து என்று மேலும் கழகங்கள் தோன்றியிருக்கும். இனி, அவ்வாறு இல்லாதவிடத்து முத்தமிழ்ப் புரக்கும் சான்றோரும் இல்லாமற் போயினர். அத்தகையவர் இருப்பின் அவரைப் பாடலாம். அவர் இல்லாதவிடத்து எவரைப்பாடுவது என்றபடி

அரசும் பொடிந்த - இனி, புலவர்களைப் பேணிய தமிழ் அரசுகளும் காலக் காய்ச்சலுள் பொடிந்து போயின. எனவே அவரையும் பாடுதற்கியலாமற் போனது.

வென்றியும் தோற்பும் இன்றே - அரசுகள் இலவாகவே அவற்றுள் வெற்றியும் தோல்வியும் நிகழா வாயின. அவை நிகழுமாயினும் வெற்றியை வாழ்த்திப் பாடவும் தோல்வியைத் தாங்கிப் பாடவும். ஒல்லும். எனவே அதற்கும் இடமில்லை என்றவாறு.

இரப்பார்க்கு ஒன்று தரவிலர் - மற்று, இக்காலத்து இரவலர்க்கு ஒன்று ஈயும் வள்ளலரும் இலர். அவ்வாறிருப்பின் அவரையேனும் பாராட்டிப் பாடலாம் என்று அழுங்கியதென்க.

தரினும் . நினைவிலர் - அவ்வாறு ஒரொவொருகால் எங்கேனும் இரவலர்க்கு ஈயும் புரவலர் இருப்பினும், அவர் ஈந்ததை நன்றியுடன் நினைத்துப் போற்றும் பண்பினாரும் இலர் இருப்பின் அவரையேனும் மெச்சிப் பாடலாம் என்றவாறு உள்ளுவந்து நன்றி நினைவிலர் என்றது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/253&oldid=1209132" இலிருந்து மீள்விக்கப்பட்டது