பக்கம்:நூறாசிரியம்.pdf/366

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

நூறாசிரியம்


78 மாவுடக் கூர்ந்தோன்


பல்கலை தெரித்த வல்லோ னாயினுஞ்
செல்வக் குவைதுயில் குரிசி லாயினும்
வெல்வோ னிறத்த விறலோ னாயினும்
மாவுடக் கூர்ந்தோன் போல
நாவடக் கில்லோன் நலியவும் படுமே!

பொழிப்பு:

பல்வகைக் கலைகளையும் கற்றுத் தெளிந்த வல்லமையுடையோனாயினும்,செல்வக்குவியலுக் கிடையே துயிலுகின்ற பெருமகனாயினும், தன்னை வெற்றி கொள்ளத் தக்க மாற்றாரை இல்லாத மாவீரனாயினும் யானையேற்றத்தை மேற்கொண்டவன் போல நாவையடக்கும் திறமில்லாதவன் துன்புறுத்தப்படுவான்.

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

கலைத்திறத்தால் சிறந்தோனாயினும், பொருள் வளத்தால் மிக்கோனாயினும், தறுக்கண்மையால் உயர்ந்தோனாயினும் ஒருவன் நாவடக்கம் உடையவனாய் இருத்தல் வேண்டும் எனவும் அல்லாக்கால் யானையேற்றம் மேற்கொண்டவன் அதனை அடக்கும் திறமிலியாயின் நலியப்படுமாறு போல நாவை அடக்க மாட்டாதவன் நலியப்படுவான் என வலியுறுத்துவது இப்பாட்டு.

பல்கலை தெரித்த வல்லோன் ஆயினும்- பலவகைக் கலைகளையும் கற்றுத் தேர்ந்த வல்லமையுடையோனாயினும்.

தெரிந்த - தெரிந்த என்பதன் வலித்தல் வேறுபாடு. இனி தெரித்த என்பதற்குப் பலருமறியுமாறு வெளிப்படுத்திக்காட்டிய எனினுமாம்.

செல்வக் குவை துயில் குரிசில் ஆயினும் -பல்வகைச் செல்வங்களும் நிரம்பிய குவியலுக்கிடையே துயில் கொள்ளும் பெருமகன் ஆயினும்,

குவை-குவியல்

வெல்வோன் இறத்த விறலோன் ஆயினும் -வெற்றி கொள்வேன் இல்லாத பெருவீரன் ஆயினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/366&oldid=1209381" இலிருந்து மீள்விக்கப்பட்டது