பக்கம்:நூறாசிரியம்.pdf/379

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

353


83 ஏகாச் சேர்க்கை


ஐயிரு திங்கள் மெய்யற வருந்திப்
பையல் வீறலில் உயநோய் மறந்தெம்
ஆகக் கனப்பில் அணைத்தமிழ் துாட்டி
ஏகுநா ளெண்ணி இளவோ னாக்கிப்
போக விட்ட புறத்தெம் புகழ்கெட 5
ஏகாச் சேர்க்கை இணைந்தோ னாகித்
தளிமகண் நுகர்ந்து களிமிக மண்டி
வெளிதுயிற் படுக்கும் விழலைப் பேறென
முனையின் றேமே தோழி
சினையில் வயிறியாச் செத்தழி யாமே! 10

பொழிப்பு:

தோழி! பத்து மாதங்கள் உடல்முழுதும் வருந்தி ஈன்று ஆண்மகவின் அழுகுரல் கேட்டு மகவுயிர்த்த துன்பம் நீங்கப்பெற்று உடற் சூட்டில் அனைத்துக் கொண்டு பாலூட்டி, கடந்து வரும் அகவையை எண்ணிப்பார்த்து, இளைஞனாய் வளர்த்து அவனை வெளியே செல்லவிட்ட எம் புகழ்கெடுமாறு கூடாநட்புப் பொருந்தினோன் ஆகி, பரத்தையினிடத்தே இன்பந்துய்த்துக் கள்ளை அளவிறப்பக் குடித்துத் தெருவில் உறங்கிக் கிடக்கின்ற விழல் போலும் வீனனை மகவென்று முன்னை ஈன்றனமே, கருவுறாத வயிற்றினளாக இறந்தொழியாமல்!

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

வருந்தி யீன்று வளர்த்து ஆளாக்கப்பெற்ற தன் மகன் தம் குடும்பத்தின் புகழ்கெடுமாறு கூடா நட்புக் கொண்டும் பரத்தையிடத்தே இன்புற்றும் வரம்பின்றி மதுக்குடித்தும் தெருவில் உறங்கிக் கிடத்தல் கண்டு வருந்திய தாய் மலடியாகச் செத்தொழியாமல் இவ் விழல் போலும் வீணனை மகவாகப் பெற்றனமே என்று தன் தோழியொடு மனம் நொந்து கூறுமாறு அமைந்தது இப்பாட்டு.

ஐ இரு திங்கள் மெய் அறவருந்தி - பத்துமாதக் காலம் உடம்பு முற்றும் வருத்தமுற்று.

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/379&oldid=1209396" இலிருந்து மீள்விக்கப்பட்டது