பக்கம்:நூறாசிரியம்.pdf/385

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

359



85 கடமை மாமலை


காமரா சென்னுங் கடமை மாமலை,
தாமிணை காணா அரசியல் தந்தை,
தலைமையை ஆக்கிய தகுபெருந் தலைவன்,
குலைவுறா நெஞ்சின் கோதிலா அமைச்சன்
மக்களுக் குழைத்த மாபெருந் தொண்டன் 5
சிக்கலை யவிழ்க்குஞ் செயற்சீ ராளன்,
தமிழகத் தலைமையை வடவர்கள் ஒப்பும்
அமைவுக் குயர்த்திய ஆளுமை வல்லோன்,
எண்ணமும் பேச்சும் செயலோ டிணைந்த
 உண்மை மாந்தனுக் கொருபே ருவமை, 10
தாழ்ச்சி நிலைக்குத் தனைத்தாழ்த் தாத
காழ்ச்செயல் மறவன், கரும வீரன்,
உலகம் வியக்க அரசியல் வானில்
நிலவிய நேர்மைக் கொள்கை நெடியவன்,
செல்வரைச் செலுத்தி ஏழையர்க் காக்கிய 15
சொல்வரை யிட்ட சோர்விலா வினைஞன்,
புகழுரை விரும்பாப் பொறுமையின் குன்றம்,
இகழுரை யில்லா ஆட்சியின் ஏந்தல்,
நல்லர சாட்சிக்குத் தன்னை நாட்டிய
 இல்லறந் துறந்த நல்லறத் துறவி, 20
ஏழையர்க் குதவிய எளிமை வாழ்வினன்,
ஊழையும் உப்பக்கம் ஒட்டிய திறலோன்,
இலவயக் கல்வி எங்கும் நிறுவிய
வலவன் இவனை வாழ்த்துக நெஞ்சே!

பொழிப்பு:

காமராசர் எனப்படும் இயற்பெயரை உடையவனும் தன் கடமையை உணர்ந்து அதனைச் செய்து நிறைவேற்றுதற்கண் பெருமலைடோல் உய்ர்ந்து விளங்கியவனுமான பெருமகன், மக்களுள் யாரும் தமக்கு ஒப்பாக வைத்து எண்ணிப் பார்க்க இயலாதவாறு உயர்ந்த அரசியல் தந்தை; நாட்டின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/385&oldid=1209661" இலிருந்து மீள்விக்கப்பட்டது