பக்கம்:நூறாசிரியம்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

15

உடலை ஆட்படுதலும், அனல் போன்ற உணர்வால் தான் உருக்குலைதலும் காட்டப்பெற்றதென்க. இனிப், புறநிலையில் இவ்வாறான மாற்றங்களும் ஏலாமையும் இருப்பினும் அகநிலையில் எஞ்ஞான்றும் ஒளி நிரம்பியிருத்தலால் கார் போர்த்த கதிர் எனலாயிற்று.

தூவெண் பஞ்சின்....ஒன்றி நடக்கும் இனியார் - பஞ்சு அகத்தும் புறத்தும் தூய வெண்மையாக இருத்தல் போல் நாவும் நெஞ்சும் ஒன்றி நடப்பார் தம் அகமும் புறமும் தூய்மையாக விளங்கும் என்றபடி அவ்வாறு விளங்குபவரே இனியார் என்றதுமாம். காட்சியும், சொல்லும், செயலும் தனித்தனியே இனிமை பயத்தலினும் இம்மூவினையும் ஒன்றி நடத்தலே இனிமையுடையது என்க. நெஞ்சு நடந்தவழி நா நடப்பதே இயல்பாக இருக்க, நா நடந்த வழி நெஞ்சு நடப்பதாக முன்பின் முரணிக் கூறியது ஏனெனில், மணம் நுகர்ந்த வழி மலர் காண்டலே புற நிகழ்ச்சியாதல் போல், சொல் வந்த பின்னரே நெஞ்சு உணரப்படும் ஆகலான் என்க.

இன்னார் - அவ்வாறு நாவும் நெஞ்சும் ஒன்றி நடவாதார்.

அஞ்சுதல் - அத்தகையாரால் பிற்றைக் காலத்து என்ன நேருமோ என்று அஞ்சுதல்.

முனிவின் நடுங்கிக் கனிவிற் கலக்கும் - இன்னாதார்க்கு இயல்பே அஞ்சுதலும், அவர் முனிந்து கூறுவனவற்றிற்கு நடுங்குதலும், இனியார்க்கு இயல்பே உவத்தலும், அவர் கனிந்து கூறுவனவற்றிற்கு உளங்கலத்தலும் இயல்பாயின வென்க. இவ்விரு நிகழ்வுகளும் அறிவு கலவாமல் உள்ளமே செய்கின்ற செயல்கள் ஆதலின், என் நிற்கா திறம் ஆயிற்று. ஈண்டு 'என்' என்ற அகவுணர்வு நிலை அறிவு பற்றி விளங்கிற்றென்க.

தற்படுத்தும் பெட்பு - தனக்கு உட்படுத்தும் தன்மை அறிவுணர்வால் ஆட்படாது உள உணர்வால் ஆட்படுதலின் 'என்' நிற்காது தற்படுத்தது எனலாயிற்று.

பொருள் சேரின்- பொருள் சேரப் பெறின் சேர்த்தல் என்னாது சேரல் என்றது, பொருளை விரும்பிச் சேர்க்காததும், இயல்பாகச் சேர்தலையே குறித்ததும் ஆகும். அவ்வாறு இயல்பாக வந்து சேரினும் அதனைத் தனக்காகக் பயன் படுத்திக் கொள்ளாது, தன் புறத்தே உள்ள யாவர்க்கும் பயன்படுத்தல் உள்ள உணர்வு நிரம்பியார் செய்கையாதலின், புறமிறைத்தல் இயல்பாயிற்று. அதுவும் அளவிட்டுச் செய்யப்படாததாகலின் இறைத்தல் எனலாயிற்று. அவ்வாறு சேரும் பொருளைத் தனக்கென வைத்துப் பேணிக் கொள்ளாது, தன்புறத்தே இருப்பார்க்கும் தட்டின்றி முழுதும் இறைத்தலால், பொருள் முட்டுப்பாடுற்று வறுமை மிகுதலை நிரப்பு எனலாயிற்று.

வறுமை என்பது ஏலாமை, சோம்பல், உழையாமை, முயற்சியின்மை முதலியவற்றால் வரும் வெறுமை நிலை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/41&oldid=1221136" இலிருந்து மீள்விக்கப்பட்டது