பக்கம்:நூறாசிரியம்.pdf/413

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

387


93 இறப்பினுஞ் சிறப்பே!

இற்றைப் புரிந்திவர் ஏற்றற் குளரென
அற்றைப் பயந்திலள் எந்தாய் அழிவோர்க்
கொன்றுள் ளுவந்துயிர் புரந்திட ஒருவர்
என்றும் அழிந்திலர்; இல்லவ ரெனினும்
உலர்நா ஆற ஒருகை நீரே! 5
சிலர்பலர் வெகுளினுஞ் சிறப்பில போற்றேம்
எவரிழி செய்யினு மேற்றன. விகழேம்
பொன்றுவ பொன்றுவ, பொன்றில பொன்றா!
குன்றலும் வேறலுங் கொள்ளுநர் தகவே!
ஒன்றுவ தொன்றிலா தொழியினும் 10
என்றும் உண்டே இறப்பினுஞ் சிறப்பே!

பொழிப்பு:

இன்று யாம் உதவி புரிய இவர் ஏற்றுக் கொள்ளுதற்கு உரியவர் என்று கருதி அன்று எம்மை ஈன்றாளல்லள் எம் தாய் இறக்கும் நிலையில் இருப்போர்க்கு ஒன்றினை மனமுவந்து அளித்து அவரைக் காப்பாற்றுதலாலே எக்காலத்தும் ஒருவர் அழிந்தாரல்லர் தாம் வறுமையுற்றவரே யாயினும், பிறரது உலர்ந்த நா ஊறப்பெறுதற்கு அவரளிக்கும் ஒரு கை நீரே போதுமானது. ஆங்காங்குச் சிலரும் பலரும் வெகுண்டாலும் சிறப்பில்லாதனவற்றை யாம் போற்றுவேமல்லேம்; எத்தகையார் இழிவுபடுத்தினும் தகுதியானவற்றை யாம் இகழ மாட்டேம், அழியத்தக்கன அழிவனவாம்; அழிவற்றன அழிய மாட்டா; தோல்வியுறுவதும் வெற்றி பெறுவதும் அவற்றை ஏற்போர்தம் தகுதியைப் பொறுத்தனவே. ஒருவர் அடையத் தக்கது அவர்பால் வந்து பொருந்தாவிடினும், அந்நிலையிலேயே அவர் இறந்தாலும் அவர்க்குரிய சிறப்பு எக்காலத்தும் உண்டு.

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

இக்காலத்து இவர் உதவி புரிதற்குரியார், இவர் பெறுதற்குரியார் என்று முன்னறிந்தோ விரும்பியோ யாரும் பிறப்பிக்கப்படவில்லை. துன்ப-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/413&oldid=1211241" இலிருந்து மீள்விக்கப்பட்டது