பக்கம்:நூறாசிரியம்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

29


ஒழுகு - ஒழுக்கம், மக்கள் ஒழுக்கம் பண்பாடு என்க. ஒழுகினும் ஒழுக்கத்தானும் - சொற்சிறப்பு முற்கூறப்பட்டது.

மக்கள் பலர் ஆக - அவ்வக்கால் பெற்ற நடைமுறைப் புறப்பாடு ஆகிய நாகரிகத்தானும், வழிவழிப்பெற்ற அகப்பாடு ஆகிய பண்பாட்டானும் மக்கள் பல பிரிவுகட்கு உட்பட்டவராவர். முந்நூற்றாண்டுக் கால புழக்கத்தில் ஆங்கிலரொடு புற நாகரிகத்தான் ஒன்று படினும், அகப் பண்பாட்டான் தமிழர் வேறுபடுதல் காண்க.

நிலத்தானும், மொழியானும், ஆட்சியானும், நாகரிகத்தானும், பண்பாட்டானும் மக்கள் பல்வேறு வகைப்பட்டவராவர். நிலத்தொடு மொழியும், மொழியொடு ஆட்சியும், ஆட்சியொடு நாகரிகமும் நாகரிகத்தொடு பண்பாடும் தொடர்புடையனவாகும். இவற்றுள், முன்னவை தழையத் தழையும் பின்னவை. முன்னவை குலையக் குலையும் பின்னவை.

இனி, ஒவ்வொரு நிலத்துக்கும் ஒவ்வொரு வளம் இருத்தல் உண்மையின், ஒவ்வொரு நிலத்துக்கும் ஒவ்வொரு மொழி உண்டாம். அவ்வவ்வெல்லை தடவும் மொழி தூய்மை மிக்கிருத்தலும், அவ்வவ்வெல்லைக் கடவும் மொழித் தூய்மை மிக்கழிதலும் இயல்பு. நெல்லைத் தமிழ் கேரளத்தும், ஆந்திரத் தெலுங்கு சென்னையினும் மிக்கழிதல் காண்க.

இவை போன்றே ஆட்சி, நாகரிகம், பண்பாடு முதலியவை ஒன்றொடு ஒன்று முட்டித் திரிந்து வேறாதல் இயல்பாம். இவை எல்லாமும் எத்திரிபுறினும், சான்றாண்மை எந்நிலத்தும், எக்காலத்தும், எம்மொழிக் கூட்டத்தும், எவ்வாட்சிக் காலத்தும், எவர் நாகரிகத்தும், எப் பண்பாட்டிடையினும் திரிபுறாது நிற்றல் தன்மையை விளக்கவே இத்திரிபுகள் வலியுறுத்தப்பட்டன.

எத்திசை - எம்மருங்கு

திசை, திக்கு தூய தமிழ்ச் சொற்களே
திசையச் செய்தலின் திசையாயிற்று.
திக்கச் செய்தலின் திக்கு ஆயிற்று

திசைதல் திக்கல் -தடுமாறல், மயங்கல். வழி புலப்படாத்தன்மை. திக்கு என்ற தென் சொல்லை தாம் கொண்டு, வடசொல் என்று வழக்கழித்து இழிவழக்காடுவர் ஆரியர்.

திகைதல் - திசைத்தல் ஒரு பொருட் பல சொற்கள்.

என்னோர் ஆயினும் எத்திறத்தோர் ஆயினும் இன்ன நாட்டினர், மொழியினர், கொடியினர், அரசினர், மாணினர், ஒழுகினர் என வரையறை தவிர்ந்த திறத்தோர்.

புலனும் உள்ளமும் -அறிவுணர்வும், உள்ளவுணர்வும் அறிவுணர்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/55&oldid=1189527" இலிருந்து மீள்விக்கப்பட்டது