பக்கம்:நூறாசிரியம்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

நூறாசிரியம்

பதிந்து நினைவில் நிற்கின்ற வாகையால், நெருநல் ஒவத்து நினைவு என்றாள். நெருநல்-முன்நாள். நேற்று. இக்காட்சி நெடுங்காலத்திற்கு முந்தியதாயினும் நேற்று நடந்ததுபோல் அவள் உள்ளத்து அழியாமல் நின்றது என்றபடி

அழியாமே- அழியாமல் நிற்க,

பார்த்த மேனி படர - தான் பார்த்துக் கொண்டிருக்கவே மேனி படர்ந்து நிற்க, படர்தல்- பரந்து வளர்தல்

நடை நெற்றி ஆடு சிறு கால் அதைந்து உரமேற - நடையானது தள்ளாடும்படி ஆடி அசைந்த அக்குழவியின் சிறிய கால்கள் பருத்து வலிமை மிகுந்தது என்றபடி

நெற்றுதல் - நடை தவறுதல், அதைத்தல் - பருத்தல்.

மெலிந்த புன்மார்பு பொலிந்து வலிய - மெலிவான இளமார்பகம் அழகு பெற்று வலிவெய்த

குரல் புலர்ந்து -சிறு பருவத்திலிருந்த மென்குரல், தடிப்பேறி வலிவு பெற்றது என்றபடி, புலர்தல் அவிழ்தல், மலர்தல், கட்டு நீங்குதல்.

அனல் தாவல் - முகத்துக் கண் குறுமயிர் அரும்பி, தாடியும் மீசையும் அடர்ந்து வளர்தல்.

உளை- ஆண் தலைமயிர்-பிடரிமயிர் பொதிதல்- நிறைந்து விளங்குதல்.

கழுத்து அடர - பின் கழுத்துப் பகுதியை அளாவி நிற்ப.

மேனி பரந்து வளர்தலும், தள்ளாடிக் கொண்டிருந்த கால்கள் பருத்து, வலிந்து உரம் பெறுதலும், மென்மையான மார்பகம் அழகு பெறும்படி வன்மையுறுதலும், மென் குரல் கட்டு நீங்கி உடைந்து பெருமித முறுதலும், முகத்துக்கண் குறுமயிர் திரளுதலும், தலைமயிர் அடர்ந்து பெருகிப் பின்கழுத்தை அளாவி நிற்றலும் ஆண் மகன் பருவ முறுதலுக்கான அறிகுறிகளாகையால், தாய் இம்மாறுதல்களைத் தன் மகனிடத்தில் படிப்படியாகக் கண்டு, தன் மகனை இவ்வளவு மாற்றத்திற்கும் உள்ளடக்கிய காலத்தை வலிது என்று வியந்தனள் என்றபடி

முலை முகம் பதியப் பாலருந்திய குழவியை இளையோனாக்கிய காலம் அவன் பால் இன்னும் சில மாற்றங்களையும் செய்யக் கருவியாக விருந்ததை அவள் மேலும் கூறுவாள். தன் மகன் முழு அளவில் இளையோனாகிய பின், அவன் தோற்றம், காதல் மணம் கொண்ட கன்னியர் தம் நெஞ்சங்களை மிதித்துத் துன்புறுத்தும்படி இருந்தது என்றும் கண்டாள் எனவே வளைமாதர் மனம் மிதிப்பத் திமிர்ந்து எழுந்து நின்றான் என்றாள். வளையல்கள் அணிந்த காதன் மிக்கக் கழியிளமைக் கன்னியரின் மனநினைவுகளை யெல்லாம் மிதித்துத் துயர்தரும்படி, உடல் பருவத்திரட்சியுற்று எழுந்து நின்றான் என்றபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/62&oldid=1221677" இலிருந்து மீள்விக்கப்பட்டது