பக்கம்:நூலக ஆட்சி.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படுகின்றது. மேலும் நம் நாட்டில் சுற்றும் நூலகங்களின் துணைகொண்டு நாட்டுப்புற நூலகத்தொண்டும் நடைபெற விருக்கின்றது. குழந்தை நூலகம், பொருட்காட்சி சாலை முதலியனகூட இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத் தலைநகரங்களிலே நிறுவப்படலாம்.

நமது நாட்டின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் நூலக வளர்ச்சிக்காக 140 லட்சம் வெண்பொற் காசுகள் ஒதுக்கப்பட்டிருப்பது மிகவும் போற்றப்பட வேண்டிய தொன்றாகும். நூல் நிலையக் கலைப் பயிற்சி அளிக்க கல்லூரி (Central Training Institute in Library Science) ஒன்று நிறுவ 10 லட்சம் வெண்பொற் காசுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

மேலே கூறப்பட்டுள்ள நூலகத் திட்டங்கள் பொது மக்களுக்குத் தொண்டு செய்யவும், கற்கவும் படிக்கவும் விரும்புவோருக்கு வழி காட்டவும் தீட்டப்பட்டுள்ளன. தற்காலக் கல்வி, கற்பிப்பதிலிருந்து கற்பதற்கு மாறியுள்ளது; கற்கும் இடம் நூலகமே. எனவே இந்நூலகத் தொண்டினைப்போல் சிறந்த தொண்டு வேறென்றுமில்லை. இது நாட்டுத் தொண்டாக மாறும் காலம் சேய்மையில் இல்லை. கல்லூரிகளில் பள்ளிகளில் பயின்றுவரும் கட்டிளம் மாணவர்கள் வருங்காலத்தில் நூலகப்பணியில் ஈடுபடுவது நாட்டுக்கும் அவர்களுக்கம் நன்மை பயப்பதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/19&oldid=1111545" இலிருந்து மீள்விக்கப்பட்டது