பக்கம்:நூலக ஆட்சி.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிறர் புலமைக்கு எட்டாத நிலையில் எழுதியுள்ளாரா அன்றி எவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தமது எண்ணக் குவியல்களைத் தந்துள்ளாரா என்று கவனிக்க வேண்டும்.

3. அந்நூல் வெளியான காலத்தையும் நாம் கருத்திலே கொள்ளவேண்டும். குறிப்பாக அறிவியல், தொழில் நுணுக்கங்களை விளக்கும் நூல்களைத் தேர்ந்தெடுக்குங்கால் அவைகள் தற்காலத்திற்குப் பொருந்திய கருத்துக்களைக் கூறுகின்றனவா என்பதை அறிதல் அவசியமானதாகும். ஆனால் ஒரு சில பழம்பெரும் நூல்கள் தனிச் சிறப்பை என்றும் பெற்று விளங்குகின்றன. அதனையும் நாம் கருதுதல் சிறப்புடைத்து.

4. அடுத்து நூலானது நல்ல முறையில் அச்சிடப்பட்டுள்ளதா, சிறந்தமுறையில் தொகுக்கப்பட்டுக் கண் கவரும் கட்டுக் கோப்புடன் விளங்குகின்றதா என்பவற்றையும் நூலகத்தார் அறிதல் வேண்டும். எழுத்துக்கள் தெளிவாய் யாவரும் சிறிதும் தொல்லையின்றிப் படிக்கும் வகையில் இருத்தல் வேண்டும். அச்சிடப்பட்டிருக்கும் தாள் நல்ல வெண்மையும் நீண்டநாள் உழைக்கும் தன்மையும் கொண்டதாய் விளங்குதல் இன்றியமையாததாகும். நூலினுள்ளே உள்ளுறை, படங்கள், விளக்கக் குறிப்புக்கள் உள்ளனவா என்பதையும் உற்றுநோக்குதல் வேண்டும். இவை தவிர, பின்வருவனவற்றையும் நூலகத்தார் நூல் தேர்ந்தெடுக்குங்கால் கடைப்பிடித்தால் நூலகம் செழித்து வளரும் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/25&oldid=1111758" இலிருந்து மீள்விக்கப்பட்டது