பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

நெஞ்சக்கனல்


மாயாதேவி போன்ற மாண்புமிகு தாரகைகள் மின்னவும் புகழடையவும் நம் வள்ளலே உறுதுணை புரிந்தவர். நல்லவர்களின் நண்பர், தீயவர்களின் எதிரி, துரயவர்களின் துணைவர், தூர்த்தர்களைத் தொலைப்பவர், கமலக்கண்ணன் அவர்களே. கருணை மயமாக ஊறும் அந்தக் கிணற்றிற்கே உங்கள் ஒட்டைப் போடவேண்டுகிறேன்”—என்பது போன்ற சொற்பொழிவுகளைக் கமலக்கண்ணனின் ஆட்கள் முழக்கித்தள்ளினார்கள். ‘தினக்குரல்’ பக்கம் பக்கமாகக் கமலக்கண்ணனைப் பற்றிப் புகழ்ந்து எழுதியது. துண்டுப் பிரசுரங்கள் விமான மூலம் தூவப்பட்டன. பானர்கள்,தோரணங்கள், சுவரொட்டிகள், எங்கும் கமலக் கண்ணனின் கிணற்றுச் சின்னமே தென்படலாயிற்று. இருபத்தைந்து கார்களும், ஐந்து ‘வான்’களும் தொகுதி முழுவதும் சுற்றின. பனம் தண்ணீராக ஒடியது.

“ரொம்பச் செலவழிக்கிறேன்னு பேசிக்கிறாங்க... இத்தினி செலவழிச்சி ஜெயிச்சுத்தான் என்ன பண்ணப் போறே?”—என்று ஒரு வழிக்கும் வராத கமலக்கண்ணனின் தாய்கூட ஒருநாள் அவரை மெல்லக் கண்டித்தாள்.

“பேசாம இரம்மா! உனக்கொண்ணும் இதெல்லாம் புரியாது. ஜெயிச்சா எத்தினியோ காரியம் ஆகும்”—என்று தாய்க்குப் பதில் சொன்னார் கமலக்கண்ணன். கமலக்கண்ணன் நின்ற தொகுதியில் மிக முக்கிய கட்சியும், அப்போதைய ஆளும் கட்சியுமான தேசியக்கட்சியின் போட்டி இல்லை என்றாலும் மற்றக் கட்சிகளின் போட்டியும், உதிரி களான சுயேச்சைகளின் போட்டியும், அதிகமாக இருந்தது. ஒட்டுக்கள் அநாவசியமாகப் பிரிந்து கமலக்கண்ணன் தோற்றுப் போய்விடுவாரோ என்ற பயமும் எழுந்தது. ஏற்கெனவே அபேட்சை மனுத்தாக்கல் செய்வதற்கு—முன்பாகவே—சிலரை நிற்கவிடாமலே தடுத்திருந்தார் அவர். கொடுக்க வேண்டியதை கொடுத்துத் தடுக்க வேண்டியதைத் தடுத்திருந்தார் என்றாலும் கூடப் பயம்–பயமாகத் தான் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/110&oldid=1048377" இலிருந்து மீள்விக்கப்பட்டது