பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

நெஞ்சக்கனல்

பட்டு கண்டுபிடிக்க முடியுமே ஒழிய அதற்கப்பால் வெறும் கோடுகளாக ஏறி இறங்கி வளைந்து புரண்டு நீளும் கிறுக்கலை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. யாருக்கு, எதற்கு எவ்வளவிற்கு என்றெல்லாம் கவலைப்படக் கூடச் சோம்பல் பட்டுக் கொண்டே கையெழுத்திட்டாலும் இன்னும் பல தலைமுறைகளுக்கு அந்தச் செல்வம் கரைந்துவிடப் போவதில்லை. அலட்சியத்திற்கு அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம். அல்லது நீண்டகால அநுபவமும் நம்பிக்கையும் வாய்ந்த அக்கவுண்டண்ட், காஷியர் போன்ற ‘கவந்தன்கள்’ அதையெல்லாம் ஒரு முறைக்குப் பலமுறை கவனித்து உறுதி செய்யாமல் ‘செக்'கே எழுதமாட்டார்கள் என்ற நம்பிக்கையாகவும் இருக்கலாம். உண்மையைச் சொல்லப் போனால் தன் குடும்பச் சொத்துக்கள் எங்கே எப்படி எப்படி எந்த எந்த உருவத்தில் உள்ளன என்பது கூட அவருக்குச் சரியாகத் தெரியாதுதான். எல்லாம் அக்கவுண்டண்டுக்கும் காஷியருக்கும் வீட்டில் அம்மாவுக்கும்தான் நன்றாகத் தெரியும். இந்த மாபெரும். சென்னைப்பட்டினத்திலேயே முப்பது வீடுகளுக்கு மேல் தம் குடும்பச் சொத்தாக இருப்பதாய் அவருக்குத் தெரியுமே ஒழிய, எங்கெங்கே எந்த வீடு இருக்கிறது? யார் வாடகைக்கு இருக்கிறார்கள் என்ன வாடகை வருகிறது? என்பதெல்லாம் அவருக்குச் சரியாகத் தெரியாதவை. அவருக்கு முதுமையுமில்லை, துள்ளித் திரியும் இளமையும் இல்லை. முப்பத்து ஏழு வயது என்பது வாலிபத்தின் கடைசி அத்தியாயமாகவும் இருக்கலாம், நடுத்தரப் பருவத்தின் முதல் அத்தியாயமாகவும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் பணக்காரர்களுக்கு நிரந்தரமாக ஓர் இளமை உண்டு. உப்புப்புளிக்குக் கவலைப்படுகிறவனுக்கு அந்தக் கவலையே ஒரு முதுமை. ஒரு வேலையுமில் லாதவனுக்கு அதுவோ ஓர் இளமையாகிற வசதி கிடைக்குமாயின் அந்த இளமை நம் கமலக்கண்ணன் அவர்களுக்குத் தாராளமாகவே கிடைத்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். சிலவேளைகளில் கழுத்தின் கடைசி நுனிவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/14&oldid=1015997" இலிருந்து மீள்விக்கப்பட்டது