பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

157


கம் மறுத்து எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. ‘தினக்குரல்’ கமலக்கண்ணனின் பத்திரிகை என்பதாலேயே அதில் வந்த மறுப்பு–பயனில்லாமல் போயிற்று. ஏராளமான கண்டனக் கடிதங்கள் தினக்குரலின் அலுவலகத்தில் குவிந்தன. ‘உம்மைப்போல் முந்தா நாள் காலையில் பதவிக்காகக் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு எல்லாம் காந்திராமனைத் தாக்கி எழுதுவதற்கு யோக்கியதையே இல்லை’ என்று வந்த எல்லாக் கடிதங்களுமே கமலக்கண்ணனைத் திட்டின. சில ஊர்களிலிருந்து பத்திரிகையின் அன்றையப் பிரதியை எரித்த சாம்பல் கற்றைகள் கவரில் வந்தன. கமலக்கண்ணன் பயந்துவிட்டார். உடனே காந்திராமனை எதிர்த்து எதுவும் எழுதக்கூடாதென்று தினக்குரலுக்கு அவரே கட்டளையிட வேண்டியதாயிற்று. ஒருவேளை நினைத்துப் பார்த்தால் காந்திராமனைப்போல் நெஞ்சில்கனல் அவியாமல் இருக்கிற ஒருவரைக் கொன்று விட வேண்டும் போலிருந்தது அவருக்கு இன்னொரு வேளை– இன்னொரு விதமான மனநிலையோடு நினைத்துப் பார்த்தால்–நெஞ்சில் அப்படி ஒரு கனல் இல்லாத தன்னைத்தானே கொன்று கொண்டு விட வேண்டும் போலவும் இருந்தது.

அவரைப் போன்ற ஒரு பிரமுகர் நினைத்துப் பொறாமைப் படவேண்டிய எந்த வசதியும் காந்திராமனிடம் நிச்சயமாக இல்லை. ஆனால் அவரிடம் இல்லாத அந்த நெஞ்சின்கனல்– தார்மீகக் கனல் அவனிடம் இருந்தது. அதைக் கண்டு தான் அவர் பயந்தார். அதை நினைத்துத் தான் அவர் பொறாமைப்பட்டார்.

அவன் மட்டும் பணத்தினால் விலைக்கு வாங்கிவிட முடிந்த மனிதனாக இருந்தால் அவர் நாளைக்கே அவனை விலைக்கு வாங்கிவிடத் தயார். இந்த மாகாணத்தையே விலைக்கு வாங்க முடிந்த பணவசதி அவரிடம் உண்டு. ஆனால்...? ஆனால்? ‘நோ ஒன் கேன் பார்ச்சேஸ் ஹிம்...’

இடையே ஒருமுறை ஸ்டேட் நிதிமந்திரிகளின் மாநாட்டிற்காக டெல்லி போய் வந்தார் கமலக்கண்ணன். மத்திய நிதி மந்திரி மூன்று தினங்கள் மாநில நிதி மந்திரிகளைக்கூட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/159&oldid=1049077" இலிருந்து மீள்விக்கப்பட்டது