பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

நெஞ்சக்கனல்


‘அடித்தளக் கல் நாட்டியவர்– பிரபல தொழிலதிபர் திரு.கமலக்கண்ணன் அவர்கள்’–என்று முதல்நாள் மாலை தாமே நாட்டிய சலவைக்கல்லில் பொறித்திருந்த தம்முடைய பெயர் அவருக்கு நினைவு வந்தபோது அந்த மாதிரித் தம் பெயரைக் கல்மேல் எழுதிய அவர்களுக்கு மேலும் ஏதாவது உதவ ஆசைப்பட்டார் அவர். அப்படி உதவலாமா என்பதையும் தாயிடம் கலந்தாலோசித்தார்.

“ஏற்கெனவே அவங்களுக்கு ஒரு மூவாயிரம் நன்கொடையாகக் கொடுத்திருக்கேன். இப்ப கட்டிட நிதிக்கின்னு தனியாக் கேக்கிறாங்க. நீ என்னம்மா நினைக்கிறே? இன்னொரு ஐயாயிரம் கொடுத்துடலாமா? “இன்கம்டாக்ஸ்”காரன் கொண்டு போறதை இவுங்கதரின் கொண்டு போகட்டுமே...?”

“கட்டாயம் கொடுடா கமலு! தருமம் வீண்போவாது! இவ்வளவெல்லாம் பேர் போட்டிருக்கறப்ப நாமளும் பதிலுக்கு ஏதாச்சும் உபகாரம் பண்ணனுமில்லை?” என்றாள் அந்த அம்மாள்.

“நாளைக்கு இன்னொரு ஐயாயிரத்துக்குக் ‘செக்’ போட்டு அனுப்பிச்சிடறேன்” என்று தானே முடிவு செய்ததை அழ்மாவிடம் இணங்குவது போல் வெளியிட்டார் கமலக்கண்ணன். தாயிடம் பேசிவிட்டு அவர் மறுபடி முன்ஹாலுக்கு வந்தபோது–அவரைக் காண்பதற்கு யாரோ சிலர் காத்திருப்பதாக வேலைக்காரன் வந்து தெரிவித்தான்.

“யாருன்னு கேட்டுக்கிட்டு வா!” என்று வேலைக் காரனை அனுப்பிவிட்டு உள்ளேயே தயங்கி நின்றார் அவர். யாராயிருந்தாலும் வந்திருப்பவர்களை உடன் பார்க்க வேண்டும் போலவும், உபசரிக்கவேண்டும் போலவும் அப்போதைய மனநிலை இருந்தது. ஆனாலும் யாரென்று தெரிந்துகொள்ள விரும்பினார்.

வேலைக்காரன் இரண்டு நிமிஷத்தில் திரும்பி வந்து, “யாரோ கோவில் ஆளுங்க. ஏதோ கடம்பவனேசுவரர் கோயில் நிதியாம்”– என்றுதெரிவித்தான். கமலக்கண்ணன் உடனே பாத்ருமில் நுழைந்து அவசர அவசரமாக முகம் கழுவி நெற்றியில் விபூதி பூசிக்கொண்டு வெளியேவந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/50&oldid=1047330" இலிருந்து மீள்விக்கப்பட்டது