பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

83


“பத்திரிகையிலேயே விளம்பரம் செய்தபடி ஐநூறு ரூபாய் பரிசு கொடுக்கனுமே! இல்லாட்டி ஏமாத்திப் பிட்டதாகப் பேசுவாங்களே?” என்றார் ஒருவர்.

“அதுக்கென்ன? பிரகாஷ் பப்ளிஸிட்டி பிரகாசமும் போட்டியில் கலந்துகொண்டு ‘தினக்குரல்’ங்கிற பேரை எழுதி அனுப்பினதாகவே சொல்லி அவருக்கு ஐந்நூறு ரூபாய் பரிசையும் கொடுத்தாப் போச்சு...’ என்று அந்தப் பிரச்சினைக்குச் சுலபமாக முடிவு சொல்லிவிட்டார் கமலக்கண்ணன். உடனே– அப்போதே– கலைச்செழியனைப் போனில் பிடித்து அந்தச் செய்தியையும் தெரிவித்து விட்டார். மறுநாள் காலையிலேயே பிரகாஷ் பப்ளிஸிட்டி பிரகாசத்தை அழைத்துக்கொண்டு மறுபடி கமலக்கண்ணனைத் தேடி வந்துவிட்டான் கலைச்செழியன். இன்று பிரகாசம் வெறுங்கையோடு வராமல் கமலக்கண்ணனுக்குப் போடுவதற்கு ஒரு மாலையோடு வேறு வந்திருந்தார்.

“இதெல்லாம் எதுக்குங்க...? இந்த ‘பார்மாலிடீஸெ’எனக்குப் பிடிக்கிறதில்லே?” என்று கமலக்கண்ணன் அந்த மாலை மரியாதைக்கு நாணி ஒதுங்குவதுபோல் நடித்தாலும் பிரகாசம் அப்படிச் செய்ததை அவர் மனம் கொண்டாடி வரவேற்கவே செய்தது. சொல்லப் போனால் இப்படி மாலைகளுக்கும் மரியாதைகளுக்கும் தான் அவர் மனம் ஏங்கிக் கிடந்தது. பிரகாசம் அதை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தார்.

பிரகாசம் மாலையைத் தன் கழுத்தில் போட்டு எலுமிச்சம்பழத்தைக் கொடுத்த பத்தாவது நிமிடமே அந்தப் பரிசுத் தொகை ஐநூறு ரூபாயை ஒரு கவரில் போட்டுக் கொடுத்துவிட்டார் கமலக்கண்ணன். மாலையைக் கழுத்தில் போட்டதும் எலுமிச்சம் பழத்தையும் கையில் கொடுக்கிற வழக்கம் எதற்காக ஏற்பட்டதோ– ஆனால் பொருத்தம் மிக நன்றாக அமைகிறது. எப்பேர்ப்புட்ட மனிதனுக்கும் மாலை கழுத்தில் விழுந்ததும் ஒரு கிறுகிறுப்பு -- தலை சுற்றல்– வருகிறதே -- அதைக்கருதித்தான் எலுமிச்சம்பழத்தையும் உடன் கொடுக்கிறார்கள் போலிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/85&oldid=1047796" இலிருந்து மீள்விக்கப்பட்டது