பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

நெஞ்சக்கனல்


சிலைடுகளிலிருந்து, தகர போர்டுகள் வரை எல்லா விளம்பரங்களிலும் மாயாதேவி ஒரு ‘தினக்குரல்’ இதழைக்கையில் விரித்துப் படித்துக் கொண்டிருப்பது போல்– படுத்துக் கொண்டிருக்கும் காட்சியோடு விளம்பரங்களைச் செய்திருந்தார் ‘பிரகாஷ் பப்ளிஸிட்டீஸ்’ உரிமையாளர் பிரகாசம். ஒரு தினசரிப் பத்திரிகையை ஒரு கவர்ச்சி நட்சத்திர நடிகை படிப்பதுபோல் காட்சியிட்டு விளம்பரம் செய்தது, இது முதல் தடவை–என்று கமலக்கண்ணனைச் சந்திக்கும் போதெல்லாம் பெருமையாகக் கூறிவந்தார் பிரகாசம்.

மாயாதேவியின் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்த காரணத்தால் கமலக்கண்ணனும் பிரகாசத்தை ஒரு செல்லப்பிள்ளை போல் கவனிக்கத் தொடங்கியிருந்தார். தன்னுடைய அந்தரங்கங்களும், பலவீனங்களும், பிரகாசத்திற்குத் தெரிந்தவைகளாக விடப்பட்டதன் காரணமாகவே –நிர்ப்பந்தமாகப் பிரகாசத்தைத் தன் செல்லப்பிள்ளையாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. கலைச்செழியனோ பிரகாசத்துக்கு முன்பே செல்லப் பிள்ளை ஆகிவிட்டிருந்தான். பத்திரிகை எப்படி நடத்துவது என்பதைப் பற்றிய விவரங்களை– இந்த இருவர் மட்டுமே தன்னை அணுகிக் கூறும்படி விட்டிருந்தார் கமலக்கண்ணன்.

இருவரும் சேர்ந்து தங்களைத் தவிர அவருக்கு வேறு சிந்தனைகள் கிடைத்து விடாதபடி பாதுகாத்து வந்தனர். வசதிகளை உடையவர்களை அண்டிப்பிழைக்கின்றவர்கள் இயல்பாகவே செய்கிற காரியம்தான் அது. தாங்கள் அண்டிப் பிழைப்பதோடு பிறர் அண்ட முடியாதவாறு கவனித்துக்கொள்கிற காரியத்தையும் அவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். கமலக்கண்ணனின் இருபுறமும் கலைச்செழியனும், பிரகாசமும் இருந்து இப்படிப்பிறர் அணுகாதபடிகாத்துக் கொண்டார்கள். பத்திரிகை தரத்தில் மிகமிகக் கீழானதாக இருந்தாலும்– கமலக்கண்ணன் பதவிகளை எதிர்பார்த்து எந்தஅரசியல் கட்சியைச்சார்ந்திருந்தாரோ அந்தக் கட்சிக்கு ஆதரவாகவே பத்திரிகை நடத்தப்பட்டது. கட்சியின் குரலாக வேறு சரியான பத்திரிகைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/92&oldid=1048342" இலிருந்து மீள்விக்கப்பட்டது