பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

உலகில் தோன்றிய உயர்தனிச் செம்மொழிகளில் ஒன்றாகத் தமிழ் வளமுடன் வாழ்ந்து வருகின்றது. இத்தகைய சீர்த்தி மிகு தமிழ்மொழி பிறந்த வரலாற்றினை “மொழி பிறந்த கதை’ என்னும் முதற் கட்டுரை விளக்குகின்றது. காலந்தோறும் அக் கன்னித் தமிழ் வளர்ந்து செழித்த வரலாற்றினை அடுத்த கட்டுரை தொடுத்து மொழிகின்றது. பழந் தமிழர்தம் இலக்கியச் சிறப்பின் பெருமை அகத்திணை இலக்கியங்களாகும். மூன்றாவது கட்டுரை அகத்திணையின் சிறப்பினை விளக்கி நிற்கிறது. சங்க இலக்கியத்தின் தலையாய பெற்றி, அவ்விலக்கியத்தில் இடம் பெறும் தலைவியின் தனிப் பெரும் பண்புச் சிறப்பாகும். நெஞ்சின் நினைவுகள்’ எனுங் கட்டுரை அதற்கு விளக்கமாய் அமைந்துள்ளது. பழந்தமிழர் பல கலைகளையும் பாங்குறத் தெரிந்து தெளிந்திருந்த பல் கேள்வி முற்றிய புலமையாளர்கள். அவர் தம் வானியல் அறி வினே உணர்த்தி நிற்கிறது அப்பெயரிய ஐந்தாவது கட்டுரை. தமிழ் இலக்கியத்திற் காணலாகும் நயமான சில நகைச் சுவைக் காட்சிகளை விளக்கும் கட்டுரை அடுத்து இடம் பெற்றுள்ளது. சங்க கால மன்னரையும் மக்களையும் படம் பிடித்துக் காட்டுகிறது ஏழாவது கட்டுரை. எட்டாவது கட்டுரை ‘அழகியல் போற்றிய அருந்தமிழரை நம் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. அகங்காட்டும் அருங்குறள் திருவள்ளுவர் பெருமான் திறங்காட்டும் செம்மை சான்றது. அன்று தொடங்கி வளர்ந்த உரை நடையினைப் பத்தாவது கட்டுரை காட்டுகின்றது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடல்களில் அமைந்துள்ள கவிநயத்தினை ஈற்றயல் கட்டுரை விளக்கி நிற்கிறது. இறுதிக் கட்டுரை கவிஞர் தமிழ் ஒளியின் கவிதைச் சிறப்பினைப் புலப்படுத்துகின்றது.

என் நூல்களை ஏற்றுப் போற்றும் தமிழுலகு இந் நூலினையும் வரவேற்பதாக என வேண்டுவல்.

“தமிழகம்’, சென்னை 600 029. சி. பா.