பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மதுரைக் களம் 1963 அக்டோபர் 29-ஆம் நாள். ஓர் இடிச் செய்தியினைக் கேட்டுத் தமிழகமே அதிர்ச்சிக்கு ஆளாயிற்று. தேவர்குல மக்களுக்கெல்லாம் திருவிளக்காய்-வழிகாட்டியாய்த்- திகழ்ந்திட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் அன்று இயற்கை எய்திட்டார் என்பதே அந்தச் செய்தி. "தேவரின் சவ அடக்கத்திற்குச் செல்லலாம் என்று நினைக்கிறேன். வருகிறாயா?" என்று கேட்டார் அண்ணா. மறவர் இனத்தின் மாமேருவாய் விளங்கியவர் மறைந்த பின்னர். அங்கு செல்வது தவிர வேறு என்ன முக்கிய வேலை எனக்கு? "மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை-எமைமாட்ட நினைக்கும் சிறைச் சாலை!" என்று போர்ப்பரணி பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். கழகத்தவரை அந்தப் பூஞ்சோலையிலே தள்ளிப் பூட்டி மகிழ்ந் திடவே புதிய முறுக்கோடு செயல்படத் தொடங்கியது அன்றையக் காங்கிரஸ் அரசு. நேரு பிறந்த நாளிலேயே வேகமாகத் திறந்து கொண்டன சிறைச் சாலையின் நெடிய கதவுகள். தாளமுத்து நடராசர்களை விழுங்கிக் களித்திட்ட அந்த வேள்விக் களங்கள் இன்னும் பல கழகக் கண்மணி களைத் தழுவித் திளைத்திடத் தாகத்தோடு நீட்டிய வண்ணம் இருந்தன தங்கள் நாக நாக்குகளை 'இந்தி ஏகாதிபத்தியச் செந்தீயால்' நம் செந்தமிழ் தீய்ந்திடுமே! நாம் இரண்டாந்தரக் குடிமக்கள் ஆகிவிடுவோமே!'- என்று வெந் திடும் உள்ளங்களின் வேதனையைப் புலப்படுத்திடவே வேறு வழியின்றிச் சட்டப் பிரிவினை எரித்திடும் அறப்போரினை மேற் கொண்டது கழகம். அதனைத் தகர்த்துக் குலைத்திடவே அப்போது தலைவிரித்தாடியது அடக்குமுறை. 14-11-63-இல் 'குழந்தைகள் தின'த்தைக் கொண்டாட வேண்டிய வர்கள் குழந்தைகளை விட்டுப் பல தந்தைகளைத் -தாய்களைப் பிரித்துக் கொட்டடியிலே பூட்டிடும் கொடுங்கோன்மையிலே ஈடுபட்டனர். 490