பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/661

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வாங்கும் தொழிலாளிகள்; தங்கள வாழ்வை நகர்த்தத்தான் அவர்கள் வெளி மாநிலங்களுக்கு வந்திருக்கிறார்கள். ஆகவே தமிழர்களைக் காப்பாற்றுவது மராட்டிய அரசாங்கத்தின் கடமையாகும்." என்னுடைய இந்தக் கருத்து விளக்கம் சற்றுத் திகைப்பையே கொடுத்திருக்கலாம் அந்தச் செய்தியாளருக்கு. ஏனெனில், தமிழர்களைத் தாக்கிடும் சிவசேனைமீது நான் சீற்றத்தைக் காட்டுவேன் என்றே அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம்; அன்றையச் சூழ்நிலையில் அது இயற்கையும் கூட. நானோ தங்களுடைய மாநிலத்தில் மற்ற மாநிலத்தவரின் ஆதிக்கம் ஓங்குவதா என மனங்குமைந்திட்ட சிவசேனையையோ அதன் தலைவர் பால் தாக்கரேயையோ வசை பாடிடவில்லை ; தாழ்தாழ்ந்து தனிப் பட்ட முறையில் இழித்துரைத்திடவில்லை. மாறாக மராட்டியமக் களின் மன்னர் சிவாஜியின் மாட்சிமையையே போற்றிப் புகழ்ந்தேன். அத்தகைய உன்னத பரம்பரைக்கு உரிமையுள்ளவர்கள் ஒருமைப்பாட்டு உணர்வுக்கு ஊறு விளைவிக்கலாமா என்று சிந்திக்குமாறுதான் அச் செய்தியாளர்கள் கூட்டத்தில் கேட்டுக் கொண்டேன். பின்னர் ஆமதாபாத் நகரைவிட்டு 15-11-66 அன்று பிற்பகல் 12-10 மணியளவில் பம்பாய் வந்து சேர்ந்தேன் விமானம் மூலம். பம்பாயில் மன்கூர்டு என்னும் இடத்தில் 16-11-66 அன்று சிறப்புக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடாகியிருந்தது. துறைமுகத் தொழிலாளிகள் பெரும் எண்ணிக்கையில் உறைந் திடும் பகுதியே மன்கூர்டு. அங்குள்ள தோழர்களின் ஆர்வமோ கங்கு கரையற்றுப் பொங்கி வழிந்தது; போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் நிதி வழங்கினர். அறுபது வயது மூதாட்டி ஒருவரும், கோழி ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார் தேர்தல் நிதிக்கு. அங்கே கூட்டம் முடிவுறுவதற்கு இரவு 12-30 மணியாயிற்று. பம்பாய்த் தமிழ்ச் சங்கம் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட பெருமைக்குரியதாகும். 18-11-66 அன்று அச்சங்கத்தினர் எனக்கு வரவேற்பு அளித்தனர், வற்றாத வாஞ்சையோடு. சங்கத்தின் பொறுப்பாளராகச் செயலாற்றிய திரு கந்தசாமிக்கு நான் எங்கே அரசியல் பற்றிப் பேசி விடுவேனோ என்கிற அச்சம் போலும்! என்னை விமான நிலையத்தில் கண்டு அழைத்த போதும், தொலைபேசியில் உரையாடிய போதும் அதனை அவர் சூசகமாகத் தெரிவித்தார். 655