பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 189 என்று நமக்கு நாமே தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதற்கென ஒரு குழு அமைத்திடல் வேண்டும். அந்தக் குழுவில் இந்தக் கருத்துக்களை ஒத்துக்கொள்கிற அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் அரசியல் சட்ட நுணுக்கங்களைப் புரிந்து வரை யறுத்துக் கூறக்கூடிய நிபுணர்களும் இடம்பெறல் வேண்டு மென்று கூறியிருந்தேன். அந்த அடிப்படையில் மூவர் குழு ஒன்று நியமிக்கப்பட விருக்கிறது. மாநிலங்கள் தன்னாட்சி பெறும்வகையில் அரசியல மைப்புச் சட்டத்தை எந்தெந்த வகையில் திருத்தலாம் என்பது குறித்து மூவர் குழுவினர் தெரிவிப்பார்கள். அக் குழுவின் தலைவ ராக முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி. வி. ராஜமன்னார் இருப்பார். பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஏ. லெட்சுமணசாமி முதலியார், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பி. சந்திரா ரெட்டி ஆகியோர் அக்குழுவில் இடம் பெறுவர். மூவர் குழு அறிக்கை வந்ததும் எல்லா கட்சித் தலைவர்களை யும் கலந்துகொண்டு காங்கிரஸ் அல்லாத முதல்வர்களையும், காங்கிரஸ் முதல்வர்களையும் கலந்துகொண்டு அவர்களது நல்லா தரவைத் திரட்டுவோம். பிரச்சாரம் செய்வோம்; வாதாடுவோம்; வாதாடிப் பயனில்லையாயின் போராடுவோம்" என உறுதியளித்து திரு.ம.பொ.சி. அவர்களுக்குப் போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தேன். அதன்பேரில் அவர் சென்னையில் தொடர்ந்து போராட்டம் நடைபெறாது என்று கூறி ஒரு நாள் அடையாளபூர்வமாக மட்டும் நடத்துவதாகச் சொன்னார். நான் முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு முதன்முதலாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அனைத்துக் கட்சியினரும் பங்கு கொள்ள வேண்டுமென்று விரும்பினேன். கட்சிகளின் சார்பில் தனித் தனி சுதந்திரதினக் கூட்டங்கள், விழாக்கள் அன்றைய தினம் நடைபெற்றாலும்கூட எல்லாக் கட்சியினரும் ஒருசேர அணிவகுத்து விடுதலை நாளுக்கு விழாவெடுக்கும் நிலைமையினை அரசாங்கத்தின் சார்பில் உருவாக்கும் நோக்கத் துடன் ஆகஸ்ட் 15 சுதந்திர நாள் விழாவினை தலைமைச் செயலக கோட்டை முகப்பில் தமிழக அரசின் சார்பில் மாலை 7 மணி அளவில் கொண்டாடுவது என்றும் அந்தக் கூட்டத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றுவ தென்றும் முடிவெடுத்து அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.