பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி3 அது காய்ந்து கிடக்கும் இன எழுச்சியைத் துளிர்த்திடச் செய்வதற்காகவே பயன்பட வேண்டுமென எண்ணுகிறவன் நான் என்பதால் என் கண்ணீர், செந்நீர், உயிர்மூச்சு, என்புதோல் போர்த்த இந்த உடம்பு அனைத்துமே இந்த இயக்கத்தின் உயர்வுக்கே அர்ப்பணிக்கப்படட்டும்! நெஞ்சுக்கு நீதி" முதல் பாகத்தை வெளியிட்ட நிகழ்ச்சியே கூட, இன்றைக்கும் நினைத்துப் பார்த்தால் என்னை நெகிழ வைக்கக்கூடியது. அந்த நூலின் முதல் பாகம் "தினமணி கதிர்" நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. நெஞ்சுக்கு நீதியைத் தொடர்ந்து எழுதி முடிக்க என்னைத் தூண்டியவர் கதிரின் ஆசிரியராகப் பணியாற்றிய அன்பு நண்பர் ஆற்றல்மிகு எழுத்தாளர் "சாவி" அவர்களாவார். சென்னைக் கலைவாணர் அரங்கில் 1975 ஜனவரி 12-ஆம் நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் முக்கிய பொறுப்பேற்றிருந்தவரும், தினமணி கதிர் நிறுவனத்தில் தொடர்புடையவருமான நண்பர் இராமகிருஷ்ணன் அவர்கள் அந்த முதல் பாகத்தை வெளியிடக் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களை அழைத்திருந்தார். குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்திருந்தார். தமிழக ஆளுநர் கே.கே.ஷாவும், விழாவுக்கு தலைமையேற்க இசைவு வழங்கியிருந்தார். விழாவுக்கான நாட்கள் நெருங்கிடவே அழைப்பிதழ்களைக் "கதிர்" நிறுவனத்தார் அச்சியற்றி அனைவருக்கும் அனுப்பி வைத்தனர். "என் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தொடர்ந்து இருபத்து நான்கு மணி நேரம் நீடித்ததில்லை” என்று நான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதுண்டு! அப்படி மகிழ்ச்சியைத் தீப்பந்தம் கொண்டு சுட்டுக் கருக்குபவர்கள் தொலைவில் இருக்கும் எதிரிகளாகவும் இருக்கலாம்; அவர்கள் அதனைச் செய்யத் தாமதமானால் அருகிலிருக்கும் அன்புக்குரியோர் கூட அந்தக் காரியத்தில் கண்ணும் கருத்துமாயிருப்பர்! “நெஞ்சுக்கு நீதி" நூலை வெளியிட வரக்கூடாதென்று இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களுக்குத் தமிழ்நாட்டிலிருந்து 'நல்லவர்கள்" சிலர் கடிதங்கள் எழுதி, தந்திகள் அனுப்பி, நேரிலும் சென்று முறையிட்டுக் கொண்டனர். அந்த நல்லவர்கள் வேறு யாருமல்ல; சில தேசீயப் பிரமுகர்கள்தான்!