பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 நெஞ்சுக்கு நீதி இவ்வாறு இசைக்கேற்பப் பாடல் ஒழுங்குப்படுத்தப் பட்டது. மெல்லிசை மன்னர் எனப் போற்றப்படும் விசுவநாதன் இசையமைக்க - பின்னணி இசைப் புகழ் மணிகளான சௌந்திர ராசன், திருமதி சுசிலா ஆகியோர் பாடிய அந்த வாழ்த்து இசைத் தட்டுகளாக வெளியிடப்பட்டு, தமிழக அரசு விழாக்களில் பயன் படுத்தப்பட்டன. அரசு விழாக்களில் தமிழ்த் தாய் வாழ்த்து என நான் அறிவித்தவுடனே - அதற்கும் எதிர்ப்பு கிளம்பிடத் தவற வில்லை! 'ஆனந்த விகடன்" இதழில் கருத்துரை தீட்டிய பிரபல எழுத்தாளர் திரு.கி.வா.ஜெகந்நாதன் அவர்கள், தமிழ் ஒரு குட்டி தேவதை என்றும், மொழி வாழ்த்துப் பாடலைக் கடவுள் வாழ்த்துப் பாடலாக மாற்றியது பொருத்தமற்றது என்றும் அதற்குப் பதிலாக "அங்கிங் கெனாதபடி" எனத் தொடங்கும் தாயுமானவர் பாடலைப் பாடலாமென்றும் குறிப்பிட்டிருந்தார். மெயில் போன்ற வேறு சில ஏடுகளிலும் மறுப்புக் கருத்துக்கள் வெளிவந்தன. அப்போது பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் அவர்கள் தமிழக அரசு எடுத்த முடிவை வரவேற்று விடுத்த அறிக்கையில் எதிர்க் கருத்தாளர்களுக்குத் தக்க பதில் அளித் திருந்தார். அந்த அறிக்கை மிக முக்கியமானது என்பதால் இங்கே அதனைக் குறிப்பிடுவது பயனுள்ள ஒன்றாகும். "தமிழ் இனத்தின் கடவுள் வணக்கப் பாடலாக பேராசிரியர் சுந்தரனாரின் "மனோன்மணிய" வணக்கப் பாடலையே பாடவேண்டுமென்ற கருத்து பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழகப் புலவர் குழுவில் தீர்மானமாக வந்தது அந்தப் பாடலில் சமஸ்கிருதத்தைவிட தமிழுக்கு உயர்வு கொடுக்கப்பட்டி ருக்கிறது என்பதனால் சமஸ்கிருதப் பற்றாளர் சிலர் எதிர்த்தனர். புரட்சித் கவிஞர் பாரதிதாசன் போன்றோர் புலவர் குழுவி லிருந்து விலகுவதற்கு இதுவே வழி வகுத்தது. தாயுமானவர் பாடலைப் பாடலாமென்றும் திருக்குறள் முதல் அதிகாரத்தைப் பாடலாமென்றும் இதன்பின் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தாயுமானவர் பாடல், இந்து மதத்தை பெரிதும் சார்ந்தது எனப் பிற மதத்தினர் எதிர்த்தனர்.