பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 நெஞ்சுக்கு நீதி வழங்குவது என்பது எங்கே போய் முடியும் என்பதை இந்த அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்" இவ்வாறு ஆளுங் கட்சியாக இருந்த போதும் சரி- எதிர்க் கட்சி என்ற நிலையிலும் சரி-நக்சலைட்டுகளின் தீவிரவாத வன்முறையை ஏற்றுக் கொள்ளாவிட்டாலுங் கூட அந்த இளைஞர்கள்பால் எனக்கொரு இரக்க உணர்வு இருந்தே வந்திருக்கிறது. " - 1971-ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் பட்டமளிப்பு விழாப் பேருரை ஆற்றிடவும் அந்தப் பல்கலைக் கழகம் எனக்களித்த "டாக்டர்" பட்டத்தைப் பெறவும் நான் அங்கு சென்றிருந்த போது அந்தத் தீவிரவாத இளைஞர்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாக நேரிட்டது. அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் காங்கிரஸ் என்றும், இந்திய மாணவர் காங்கிரஸ் என்றும் அமைப்புகளின் பெயரால் எதிர்ப்புத் துண்டு அறிக்கைகளை அந்தத் தீவிரவாத மாணவர்கள் வெளியிட்டு - பெரும் அமளிக்கு வித்திட்டார்கள். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் என்னை வரவேற்றுப் பட்டமளிப்பு விழா உரையினை அமைதியாகக் கேட்டதோடு, ஆர்வத்துடன் முன் வந்து பட்டங்களையும் பெற்றுச் சென்றனர். விழா நிகழ்ச்சிகள் காலையில் முடிவுற்ற பிறகு மாலையில் அந்தத் தீவிரவாத மாணவர்களுக்கும் போலீசாருக்குமிடையே தகராறு மூண்டது! அந்த நிகழ்ச்சியை யொட்டி உதயகுமார் என்ற மாணவர் குளத்தில் விழுந்து இறந்து விட்ட செய்தியும் வந்தது! ஒன்றோடொன்று தொடர்பு படுத்தப்பட்டன! அந்த நிகழ்ச்சி குறித்து நீதி விசாரணைக்கு உடனே அரசின் சார்பில் அறிவிக்கப் பட்டது. உதயகுமாரின் பிணம் குளத்தில் அடையாளம் தெரியாத அளவுக்கு உப்பி விட்ட காரணத்தால்; முதலில் இறந்தது யார் என்று தெளிவாகச் சொல்ல முடியவில்லை. உதயகுமாரின் பெற்றோரால் கூட அடையாளம் கண்டு பிடிக்க இயலவில்லை. நீதி விசாரணை அறிக்கையில் குளத்தில் விழுந்து மாண்டது உதயகுமாராக இருக்கலாமென்றும், போலீஸ் தாக்குதலால் அது நிகழவில்லையென்றும் தெளிவாக்கப்பட்டது. கல்லூரியில் படித்துப் பட்டம் பெறாத எனக்கு “டாக்டர்” பட்டம் கொடுக்கலாமா என்பதுதான் அன்றைய தினம் எழுப்பப் பட்ட பெரிய பிரச்சினையாக இருந்தது. அந்தக் கேள்வியை மனத்தில் ஒரு ஓரமாக வைத்துக் கொண்ட நான் அந்த விழாவில் உரையாற்றினேன்.