பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 345 என்று கருதுகிறேன். "முதலமைச்சர் பொறுப்புக்கு நான் வர விரும்பவில்லை. எனக்கு வேண்டாம்” என்றுதான் அவர் தெரிவித்தார். அது மட்டுமல்ல; தம்பி மாறன் அவர்களையும் அனுப்பி வைத்து தனக்கு இந்தப் பதவி வேண்டாம் என்று தெரிவித்திடச் சொன்னார். கலைஞரின் துணைவியாரும் இதையே தெரிவித்தார். ஆனால் நாங்கள் தான் அதை மறுத்தோம். ஆகவே கலைஞர் அவர்கள் இந்தப் பதவியை விரும்பியவரல்ல; வேண்டுமென்று கேட்கவுமில்லை. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றத்தான் அவர் முதலமைச்சர் ஆனார். நாங்கள் எல்லாம் சேர்ந்துதான் அந்தச் சுமையை (முதல்வர் பொறுப்பு) சுமக்க வைத்தோம். அவர் படங்களுக்கு வசனமெழுதினால் பல ஆயிரங்களை சம்பாதிக்க முடியும். அதற்குக்கூட நேரமில்லாமல் இந்தச் சுமையை மக்களுக்காக அவர் ஏற்றி ருக்கிறார்." - காஞ்சி மாநாட்டில் இப்படிப் பேசிய எம்.ஜி,ஆர். அவர்களே, கழகத்தைப் பிளக்கும் கருவியாக மாறினார்! அந்த மாற்றம் பகிரங்கமாக வெளிப்படுவதற்கு முன்பு அவர் பேசியவைகளை நினைவுபடுத்திக் கொள்வது மிக முக்கியம். மறைந்தும், ஒளிந்தும், டெல்லியினால் தூண்டிவிடப் பட்டும் தொடங்கப்பட்ட அந்தத் துரோகத்தின் முழு உருவம் 1972 செப்டம்பர் மாத இறுதியில் வெளிப்படுவதற்கு முன்பு - அந்த இடைக்காலத்தில் எம். ஜி. ஆர். அவர்கள், என்னைப் பற்றியும், கழக ஆட்சியைப் பற்றியும் ஆற்றிய பாராட்டுரைகளை இப்போதும் எடுத்துப் படித்தால், "இவரா இப்படிச் செய்தார்?" என்று வியப்பு ஏற்படும். அந்த உரைகள் சிலவற்றை நினைவுப்படுத்துகிறேன் முதலில்.