பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/545

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தடைபட்ட பயணம்! தொடர்ந்து மிசா சட்டத்தின்படி கழகத்தினர் வேட்டை யாடப்பட்டனர். என்னுடன் யாரும் இருக்கக் கூடாதென்றும், என்னைத் தனிமைப்படுத்த வேண்டுமென்றும் திட்டமிட்டு கவர்னர் ஆட்சியில் காரியங்கள் நடத்தப்பட்டன. எனது காரில் எனக்குப் பேச்சுத் துணைக்காக யாராவது சில நாட்கள் தொடர்ந்து வந்தால்கூட அவர்கள் மிசாக் கைதிகளாக ஆக்கப் பட்டார்கள். போடி. சுருளிவேல்-கழக வழக்கறிஞர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும்கூட! அவர் சில நாட்கள் என் காரில் வந்தார் என்பதற்காகக் கைது செய்யப்பட்டார். இன்றைய சென்னை மாவட்டச் செயலாளர் தம்பி டி.ஆர். பாலு-அவர் ஒருவார காலம் என்னுடன் காரில் வந்து கொண்டிருந்தார். அவரையும் மிசா கொத்திக்கொண்டு போய்விட்டது. ஆயிரம் விளக்கு உசேன்-கழக உழைப்பாளி; அவர் சில நாட்கள் எனக்குத் துணையாகக் காரில் வந்தார். விடுமா, மிசா? அவரும் சிறையில் பூட்டப்பட்டார்! தம்பி எல். கணேசன்; நான் தடுத்தும் கேளாமல் என்னுடன் காரில் வரத் தொடங்கினார். அவர் மட்டும் தப்புவாரா? ஒரு வாரத்திற்குள் மிசா; அவரையும் வளைத்துப் போட்டுக்கொண்டது! சென்னை வீதிகளில் தன்னந் தனியனாகத்தான் காரில் சென்று கொண்டிருந்தேன். எனக்கு இரண்டு காரோட்டிகள் உண்டு! அவர்களிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தேன். அவர் களில் ஒருவர், உடல் நலமில்லை எனக் கூறிவிட்டு, வேறு ஒரு தொழிலதிபரிடம் வேலைக்குப் போய்விட்டார்! இன்னொருவர், அடுத்து இரண்டு நாட்களுக்கெல்லாம் என்னிடம் வந்து வேலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அறிவித்து விட்டுச் சென்றுவிட்டார். காருக்கு டிரைவரும் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. அப்பொழுதுதான் முன்னாள் அமைச்சர் நண்பர் கண்ணப்பன் எனக்குக் காரோட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அந்த மாபெரும் குற்றத்தைச் செய்தமைக் காக அவரையும் மிசா விழுங்கிச் சிறைக் கோட்டத்தில் போட்டுக் கொண்ட து. கழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, திராவிடர் விடுதலை சம்பந்தம், கழகப் பொதுச் செயலாளர் வீரமணி,